உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்
மற்றுமோர் ஆதாரம் அம்பலம்!

இலங்கையில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தும் வாய்ப்பு இருப்பதாக கடந்த ஏப்ரல் 9ஆம் திகதி தேசிய புலனாய்வுத்துறையின் தலைவர் சிசிர மெண்டிஸ், பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு அனுப்பிய கடிதம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக குறித்த கடிதத்தின் பிரதியை மேற்கோள்காட்டி தனியார் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முதலாவது அமர்வு நேற்று முன்தினம் இடம்பெற்றது. இதன்போது அங்கு சாட்சியம் வழங்கியிருந்த சிசிர மெண்டிஸ், தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹரான் ஹாசீம் மற்றும் அவரது சகாக்கள் இலங்கையின் பல இடங்களில் தாக்குதல் நடத்தவுள்ளதாக ஏப்ரல் 8ஆம் திகதியே புலனாய்வு தகவல் கிடைத்ததாக தெரிவித்திருந்தார்.

அத்தோடு தாக்குதல் அச்சுறுத்தல் குறித்து 9ஆம் திகதி எழுத்து மூலம் பொலிஸ்மா அதிபருக்குத் தான் தெரியப்படுத்தியிருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு அனுப்பியதாக கூறப்படும் குறித்த கடிதத்தின் பிரதி தற்போது வெளியிடப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனினும் இந்த விடயம் தொடர்பாக எந்த முன்னெச்சரிக்கையும் தனக்குக் கிடைக்கவில்லை என பாதுகாப்பு அமைச்சரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top