பொதுத் தேர்தல் காலத்தில்
முஸ்லிம் அரசியல்வாதிகள்!
நள்ளிரவு வரை அமர்ந்திருந்து
மக்களிடம் பேசப்போகின்றார்கள்!!
நாடாளுமன்றம்
கலைக்கப்பட்டுவிட்டது, பொதுத் தேர்தல்
நடைபெறப் போகின்றது
முஸ்லிம் பகுதிகளில்
தேர்தலை எதிர்கொண்டு
வெற்றி கொள்வதற்காக
மக்கள் மனங்களை
வென்று வாக்குகளை
சுவீகரிக்க எமது முஸ்லிம் அரசியல்வாதிகள் வரிந்து
கட்டிக்கொண்டு செயற்படப் போகின்றார்கள்.
கொழும்பில்
சொகுசாக வாழ்ந்தவர்கள்
தற்போது கிராமப்புறங்களுக்கு
வந்து மக்களோடு
மக்களாக இருக்கப்போகின்றார்கள்!
சொகுசான
குளிரூட்டப்பட்ட காருக்குள் கறுப்புக் கண்ணாடிகளை மூடிக்கொண்டு
மக்களையே பாராது முகத்திற்கும் கறுப்புக் கண்ணாடி அணிந்து கொண்டு சென்றவர்கள் வாக்காளர்களைப்
பார்த்து சிரித்த
முகத்துடன் அன்பாகவும்
அழகாகவும் பேசப்போகின்றார்கள்! ஏன் காரை நிறுத்தி கையும் கொடுக்கப்போகின்றார்கள்.
பள்ளிவாசல்கள்
உடைக்கப்பட்டது, சிலைகள் வைக்கப்பட்டது போன்ற சம்பவங்களையும் ஹலால்,
ஹபாயா போன்ற
பிரச்சினைகளையும் கவனத்தில் எடுக்காமல் இருந்தவர்கள் (முஸ்லிம்
மக்கள் மத்தியில்)
மேடை போட்டு அதுபற்றி வீராவேசத்துடன் கண்டிக்கப் போகின்றார்கள்!
பிரிந்து
செயல்பட்ட முஸ்லிம்
அரசியல்வாதிகள் எல்லாம் முஸ்லிம்களின் ஒற்றுமை பற்றி
குர்ஆன்,ஹதீஸ்களை
ஆதாரம் காட்டி
மேடைக்கு மேடை
பேசப்போகின்றார்கள்!
மர்ஹும்
எம்.எச்.எம்.அஷ்ரஃப்
அவர்களை நினைவு
கூர்ந்து கண்ணீர்
சிந்தி கூட்டங்களில்
பேசப்போகின்றார்கள்!
1990 ஆம் ஆண்டில் கடத்தப்பட்ட முஸ்லிம்
பொலிஸாரையும் பள்ளிவாசல்களில் கொல்லப்பட்ட
முஸ்லிம்களையும் மேடைக்கு மேடை நினைவுறுத்திப் பேசப்போகின்றார்கள்!
இஸ்லாத்தின் கடமைகளில்
ஒன்றான ஸக்காத் ஏழை வரிப்பணத்தை சரியாக
கணக்கிட்டு பகிர்ந்தளிக்கப்போகின்றார்கள்
!
குடும்ப
பெண்களை பொது
இடங்களில் வரவழைத்து
அரிசி பைக்கற்றுக்களையும்
உலர் உணவு
பார்சல்களையும் வழங்கப்போகின்றார்கள்! ஏழை மக்களிம் மின்சார, குடிநீர் பில்களுக்கு பணம் செலுத்தப்போகின்றார்கள். ஏன் இலவசமாக மின்சார இணைப்பு, குடிநீர் இணைப்பு எல்லாம் பெற்றுக் கொடுக்கப்போகின்றார்கள்.
ஏழைகளுக்கு வழங்கப்
போகின்றோம் எனத் தெரிவித்து மாடுகள் அறுக்கப்பட்டு
இறைச்சி பார்சல்களை
விநியோகம் செய்யப்போகின்றார்கள்!
கல்யாண வீடுகள், மரண வீடுகள் ஒன்றையும் விடாது சமூகமளிக்கப்போகின்றார்கள்.
விளையாட்டுக் கழக வாலிபர்களைச் சந்தித்து மகிழ்ச்சியாகப் பேசி உபகரணங்கள் வழங்கப்போகின்றார்கள்.
அதிகாரத்தை
எனக்குத் தந்தால்
எனக்கூறி வாக்குறுதிகளை தாராளமாக அள்ளி வீசப்போகின்றார்கள்!
வாக்களித்த
மக்களைச் சந்திப்பதற்கு
நேரம் ஒதுக்கிக்
கொடுக்காமல் இருந்தவர்கள் மேடைகளில் நள்ளிரவு வரை
அமர்ந்திருந்து மக்களிடம் பேசப்போகின்றார்கள்!
-
ஏ.எல்.ஜுனைதீன்
0 comments:
Post a Comment