கல்முனையில் 41வருடங்களுக்கு முன்.......

ஜம் இய்யத்துல் உலமா:
கல்முனைக் கூட்டத்தில் குழப்பம்
பொலிஸ் குண்டாந்தடிப் பிரயோகம்





இச்சம்பவம் 1979 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14ஆம் திகதி கல்முனையில் இடம்பெற்றது. இப்படியும் ஒரு சம்பவம் கல்முனையில் இடம்பெற்ருள்ளது என்பதை எமது வாலிபர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும் என்பதற்காக பதிவேற்றம் செய்துள்ளோமே தவிர வேறு எந்த நோக்கமுமில்லை.

இக்கூட்டம் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் உறவினரின் பிரதான வீதியில் உள்ள கடையின் மெல்மாடியில் அன்று இடம்பெற்றது. இது சம்மந்தமான செய்தி தினபதியில் முதல் பக்கத்தில் வெளிவந்தது.
இச்செய்தியை அன்று கல்முனையைச் சேர்ந்த மர்ஹும் அல்-ஹாஜ் யூ. சம்சுதீன் அவர்களும் சாய்ந்தமருதைச் சேர்ந்த ஏ.எல்.ஜுனைதீன் அவர்களும்  பத்திரிகைக்கு எழுதி அனுப்பி வைத்திருந்தார்கள்.
சம்பவம் இதுதான்,
கல்முனையில் கடந்த சனிக்கிழமை (1979 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14ஆம் திகதி) மாலை நடைபெற்ற ஜம்இய்யத்துல் உலமா மாநாடு  பெரும் குழப்பத்தில் முடிவடைந்தது. குழப்பத்தைக் கட்டுப்படுத்துவதற்குப் பொலிஸார் குண்டாந்தடிப் பிரயோகம் செய்தனர்.
பொதுமக்களிடையே ஏற்பட்ட பெரும் அமளிதுமளியைத் தொடர்ந்து பொலிஸார் மக்கள் கூட்டத்தை கலைக்க முற்பட்டனர். அப்போது பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
பொலிஸார் மீது சரமாரியாகக் கற்கள் வீசப்பட்டதால் பொலிஸ்காரர் சிலர் காயம் அடைந்தனர். கூட்ட மேடையை நோக்கியும் கற்களும், செருப்புக்களும் வீசப்பட்டன.

செய்தி அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேலதிக பொலிஸார் குண்டாந்தடடிப் பிரயோகம் செய்தனர். துப்பாக்கியால் வானத்தை நோக்கியும் சுட்டனர். கூட்டத்திற்கு வந்திருந்த பெரும் தொகையான மக்கள் செய்வதறியாது திக்குத் தெரியாமல் ஓடினார்கள்.

மட்டக்களப்பு இரண்டாவது எம்.பி டாக்டர் பரீத் மீராலெவ்வை  மாநாட்டு பொதுக்கூட்டத்தில்  பேசிக் கொண்டிருந்த போதே சலசலப்பும் அமளிதுமளியும் ஏற்பட்டன.

டாக்டர் பரீத் மீராலெவ்வை  கூட்டத்தில் பேசும்போது பின்வருமாறு தெரிவித்தார்:-
“இஸ்லாத்தில் அடிபடைத் தத்துவங்கள் என்னவென்று தெரியாத அலர் இன்று இஸ்லாம் பற்றிப் பேச தலைப்பட்டுவிட்டார்கள். பிரச்சினைக்குரிய மெளலவி ஒருவரின் விஷயத்தில் ஜம்இய்யத்துல் உலமா மிகவும் அவசரப்பட்டு முடிவெடுத்துவிட்டது.
பிரச்சினைக்குரிய விஷயத்தை இப்படி வீதிகளிலும்  சந்திகளிலும் மாநாடு கூட்டி விவாதிபது சிறந்ததல்ல.

பிரச்சினைக்குரிய விஷயத்திற்கு பேரறிஞர்கள் மூலமாகவும் மார்க்க மேதைகள் மூலமாகவும் சுமுகமான முடிவெடுப்பதே சிறந்த மார்க்கம். இப்படி நான் பேசுவதால், பிரச்சினைக்குரிய அந்த மெளலவிக்கு சார்பானவன் நான் என்பது கருத்தல்ல. நான் அந்த மெளலவியின்  கருத்துக்களை எல்லாம் ஏற்றுக்கொண்டவனும் அல்லன்.

அதேநேரத்தில் இங்கிருக்கும் உலமா சபையினருக்குப் பயந்து கைகட்டிப் பேசக்கூடிய ஒருவனும் அல்லன் நான். உள்ளதை உள்ளபடியே பேசுகின்றேன்..
எனது சிந்தனை தெளிவு பெற நான் இங்கு சில கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன்.எனது கருத்துக்களை  சொல்லத் தனியான மேடை ஒன்றைஅமைத்து பேசவும் தயாராக இருக்கிறேன்.

ஜம்இய்யத்துல் உலமா ”பத்வா” என்ற பெயரில் புத்தகம் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இந்தப் புத்தகத்தை வெளியிடுவதற்கு இந்த உலமா சபையில் யாருக்கும் தைரியம் இல்லையா?அதாவது இவர்களில் ஒருவருடைய பெயரைப் போட்டு இந்தப் புத்தகத்தை வெளியிட முடியாமல் போய்விட்டதா?
இவ்வாறு டாகடர் பரீத் மீராலெவ்வை பேசினார்.   அவர் அதற்கு மேல் பேசமுடியாதவாறு ஒலி பெருக்கி துண்டிக்கப்பட்டது.

பொதுமக்களில் சிலர், “பரீத் மீராலெவ்வையை பேசவிடுங்கள், அவரைத் தடுக்காதீர்கள்” என்று என்று கோஷமிட்டனர்.எதிர் கோஷங்களும் எழுந்தன.
இப்படி கூட்டத்தினரிடையே ஏற்பட்ட சலசலப்பு  ஈற்றில் பெரும் குழப்பத்தில் முடிவடைந்தது. பொலிஸார் அமைதியை நிலைநாட்ட முற்பட்டபோது பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
பொலிஸார் மீது பொதுமக்களில் சிலர் சரமாரியாக கற்களை வீசத் தொடங்கினர். மேடையை நோக்கியும் கற்கள் வீசப்பட்டன.
பொதுமக்களில் பலர் தங்கள் வீடுகளுக்கு சிதறி ஓடினார்கள். வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் அகப்பட்ட வாகனங்களில் ஏறித் தப்பி ஓடினார்கள்.
ஈற்றில்  செய்தி அறிந்து கல்முனை பொலிஸ் நிலையத்திலிருந்து வந்த மேலதிக பொலிஸார் குண்டாந்தடிப் பிரயோகம் செய்தனர். வானத்தை நோக்கியும் சுட்டனர். கூட்டத்தை ஒருவாறு கலைத்துஅமைதியை நிலைநாட்டினர்.
மாநாட்டுப் பொதுக்கூட்டம் எதுவித முடிவும் எடுக்கப்படாமல் இடைநடுவேநிறுத்தப்பட்டது.
மாநாட்டுக் கூட்ட ஆரம்பத்தில் கல்முனை எம்.பியும் முல்லைத்தீவு மாவட்ட அமைச்சருமான  ஏ.ஆர்.மன்சூர்,  பிரதி மின்சக்தி பெரும் தெருக்கள் அமைச்சரும் சம்மாந்துறை எம்.பியுமான எம்.ஏ.அப்துல் மஜீத், பொத்துவில் முதலாவது எம்.பி டாக்டர் எம்.ஏ.எம். ஜலால்தீன் ஆகியோரும் உரையாற்றியிருந்தனர்.
கல்முனை பள்ளிவாசலில் அன்று காலை இடம்பெற்ற கூட்டத்தில் போக்குவரத்து அமைச்சர் எம்.எச்.முஹம்மது கலந்துவிட்டு அவசரமாக ஹெலிகொப்டரில் கொழும்பு திரும்பிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top