ஊடகத்துறை ஆசான்
 எஸ்.டி.சிவநாயகம் ஐயா பற்றிய
என் நினைவுகளில் !


தினபதி, சிந்தாமணி பத்திரிகைகளின் பிரதம ஆசிரியராக எஸ்.டி.சிவநாயகம் ஐயா அவர்கள் கடமை செய்த காலத்தில் நானும்
அப்பத்திரிகைகளுக்கு செய்திகளை எழுதி அனுப்பிக் கொண்டிருந்தேன்.அப்படியான காலகட்டத்தில் ஐயா அவர்கள் பல அறிவுரைகள். ஆலோசனைகளை எனக்கு வழங்குவார்.

ஒரு சந்தர்ப்பத்தில் அன்னார், அரசியல்வாதிகளின் கூட்டங்களில் செய்தி சேகரிக்க நீங்கள் சென்றால் அந்த இடத்தில் உங்களுக்கு சரியான இடம் தந்து மரியாதை தரவில்லையானால் அந்த செய்தியை எழுதாமல் திரும்பி வந்து விடுங்கள். இதுபற்றி எங்களுக்கும் தகவல் தாருங்கள் என்று அறிவுரை வழங்கியிருந்தார்.

விடுதலைப் புலிகளின் அதிகாரம், அட்டகாசம் கல்முனையில் உச்சத்தில் இருந்த காலத்தில் கவிஞர் அன்பு முஹைதீன் அவர்கள் புலிகளால் கடத்தப்பட்டார்.

புலிகளின் அட்டகாசத்திற்கு எதிராக யாருமே பேசமுடியாத சூழ்நிலை. ஊடகவியலாளர்கள் அடங்கிப் போய் இருந்த காலம். எனக்கு முன்னாள் அமைச்சர் மர்ஹும் .ஆர்.மன்சூர் அவர்களின் தொலைபேசியை தாராளமாக பாவிக்கக்கூடிய வசதி இருந்ததால் அன்பு முஹைதீன் அவர்கள் புலிகளால் கடத்தப்பட்ட தகவலை பிரதம ஆசிரியர் எஸ்.டி.சிவநாயகம் ஐயா அவர்களிடம் தொலைபேசி மூலமாக தெரிவித்து அந்த செய்தியை எழுதுவதற்கு அச்சமாக உள்ளது ஐயா என்று தெரிவித்தேன்.

இதற்கு சிவநாயகம் ஐயா அவர்கள் அந்த செய்தியை இப்படி எழுதும்படி என்னிடம் தெரிவித்தார்.

கவிஞர் அன்பு முஹைதீன் புலிகளால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார் என முஸ்லிம் தரப்பினரால் தெரிவிக்கப்படுகின்றது. இது இப்படியிருக்க அன்பு முஹைதீன் கடத்தப்படவில்லை அவரை விசாரணைக்கே அழைத்துச் சென்றுள்ளோம் என புலிகளின் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. என எழுதுங்கள் உங்களுக்கு பிரச்சினை வராது என்று சொல்லி தந்தார்.

1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11 ஆம் திகதிக்குப் பின்னர் சிறிது நாட்கள் அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசம் உட்பட சில பகுதிகள் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. அந்த நாட்களில் கிழக்கில் இருந்த அதிகமான ஊடகவியலாளர்கள் மெளனித்துப் போய் இருந்தார்கள்.

இந்த நாட்களில் பிரதம ஆசிரியர் எஸ்.டி.சிவநாயகம் ஐயா அவர்களுடன் தொலைபேசி ஊடாக நேரடியாக தொடர்பு கொண்டு இப்பிரதேச நிலவரங்களை தெரிவிப்பேன்.

பிரதம ஆசிரியர் சிவநாயகம் ஐயா அவர்கள் என்னோடு பேசும் போது ஜுனைதீன் பத்திரிகையில் செய்திகள் வருகின்றதோ இல்லையோ அதனை நீங்கள் கவனிக்காமல் என்னிடம் அங்குள்ள நிலவரங்களை தந்துகொண்டே இருங்கள். ஏனெனில், அமைச்சர்களுக்கு அங்குள்ள நிலவரங்களை தெரிந்து கொள்வதற்கு வசதிகள் எதுவும் கிடையாததால் எங்களோடு தான் தொடர்புகளை ஏற்படுத்தி தகவல்களை பெற முயற்சிக்கிறார்கள் அதனால் அங்குள்ள நிலவரங்களை தந்துகொண்டே இருங்கள் என்று என்னிடம் கேட்டுக் கொண்டார்.

அன்று 5 ஆம் ஆண்டு தமிழ் பாடப் புத்தகத்தில் இடம்பெற்றிருந்த கவிஞர் அன்பு முஹைதீனின் "மகிழ்ந்தான் பையன்" எனும் கவிதைக்கு நபிகள் நாயகம் ( ஸல்) அவர்களின் உருவம் என ஒரு படத்தை போட்டு பாடப் புத்தகங்களை கல்வி அமைச்சின் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தால் வெளியிட்டிருந்தனர்.

இது சம்பந்தமாக அன்று இதனைச் சுட்டிக் காட்டி என்னால் எழுதப்பட்ட செய்தி தினபதி பத்திரிகையில் முன் பக்கத்தில் பிரசுரித்து சமூகத்திற்குள் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இது தொடர்பாக நாடாளுமன்றத்திலும் பல குரல்கள் கல்வி அமைச்சுக்கு எதிராகவும் எழுந்தன.

அன்றிருந்த கல்விச் சேவைகள் அமைச்சர் இது ஒரு பொய்யான தகவல் அரசாங்கத்திற்கு எதிரான ஒரு பத்திரிகையும் அதன் நிருபரும்தான் இல்லாத ஒன்றை எழுதி பிரச்சினைகளை தோற்றுவிக்கிறார்கள் என்று நாடாளுமன்றத்தில் பதிலளித்து தப்பிக்க முயன்றார்.

இது சம்பந்தமாக தினபதி பத்திரிகையில் 1987 ஆம் ஆண்டு ஜூன் 15, 20ஆகிய திகதிகளில்   ஆசிரியர் தலையங்கங்களை  எழுதி முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்படுத்தியுள்ள பிரச்சினையை மேலும் பகிரங்கப்படுத்தினார்.

பின்னர் புத்தகங்களை ஆதாரமாக காட்டியபோது கல்விச் சேவைகள் அமைச்சர் அன்று நாடாளுமன்றத்தில் முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்பு கோரியதுடன் அச்சடிக்கப்பட்ட 90 ஆயிரம் பாடப் புத்தகங்களையும் எரிக்கும் படியும் உத்தரவிட்டார்.

சாய்ந்தமருதில் ரவூப் மெளலவியைக் கூட்டி வந்து ஒஸ்மன் வீதியில் பேசுவதற்கு ஒரு சிலர் ஒழுங்கு செய்திருந்தனர்.

அந்த காலத்தில் கைத்தொலைபேசி வசதிகள் இல்லாத நிலையில் இது சம்பந்தமாக எனக்கு தினபதி காரியாலயத்திலிருந்து அவசர தந்தி ஒன்று கிடைக்கப்பெற்றது.

அதில் இன்று சாய்ந்தமருதில் ரவூப் மெளலவி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகின்றார். அது சம்பந்தமான செய்திகளை திரட்டி அவசரமாக அனுப்பி வைக்கவும் என்றிருந்தது.

எனக்கு ரவூப் மெளலவியின் கொள்கை பிடிக்காது விட்டாலும் மெளலவியின் பேச்சை எழுதி அவசரமாக அனுப்பியிருந்தேன்.

மெளலவியின் பேச்சு பத்திரிகையில் பிரசுரமானது. மெளலவி கூட ஆசிரியருக்கு , ஊடகவியலாளர் ஜுனைதீன் என்னுடைய கொள்கைகளை ஏற்றுக் கொள்ளுகிறாரோ இல்லையோ பத்திரிகை தார்மீகத்தை காப்பாற்றியுள்ளார். இவர் போன்ற பத்திரிகையாளர்கள் இருக்கும் வரை பத்திரிகை தர்மம் காப்பாற்றப்படும் என்று எழுதி அனுப்பிவிட்டு எனக்கும் அதில் ஒரு பிரதியை அனுப்பி வைத்தார்.

பத்திரிகையில் ரவூப் மெளலவியின் பேச்சு வந்ததும் மெளலவியின் கருத்துக்கு எதிரான பலர் என்னோடு முரண்படத் தொடங்கினார்கள். இதனை ஆசிரியர் எஸ்.டி.சிவநாயகம் ஐயா அவர்களுக்கு தெரியப்படுத்தினேன்.

அவர் எனக்கு நீண்ட கடிதம் ஒன்றை எழுதி ரவூப் மெளலவி சாய்ந்தமருதில் மேடை போட்டு பேசப் போவதாக எங்களுக்கு தெரியப்படுத்தினார் அதனை உங்கள் மூலமாக ஏற்பாடுகள் செய்து பத்திரிகையில் பிரசுரித்தோம். அவரின் கருத்துகளுக்கு எதிராகப் பேசுபவர்கள் மேடை போட்டு பேசச்சொல்லுங்கள். அப்படி பேசினால் அது செய்தியாகிவிடும். அதனையும் பிரசுரிக்க நாம் தயாராக உள்ளோம் என கடிதத்தில் தெரிவித்திருந்தார். அப்படியான கூட்டம் ஒன்றைக் கூட்டி ரவூப் மெளலவியின் கருத்துக்கு எதிராக எவரும் பேசவில்லை.

இது மாத்திரம் அல்லாமல் 1987 ஆம் ஆண்டு தினபதி பத்திரிகையில் " சாய்ந்தமருது மக்களின் துணிவு" என்ற தலைப்பில் ஆசிரியர் தலையங்கம் ஒன்றை அன்னார் எழுதியிருந்தார்.

"சாய்ந்தமருது மக்களின் குடிமைப் பண்பும் அஞ்சாமை யும் அனைவருக்கும் ஒரு முன்மாதிரி. பொது மக்கள் அனைவரும் சாய்ந்தமருது வாசிகள் போல் இருந்தால் கொள்ளைகள் மட்டுமின்றி மற்றும் பல்வேறு சமூக விரோத செயல்களும் எவ்வளவோ குறையும்" என அந்த ஆசிரியர் தலையங்கத்தை எழுதி முடித்திருந்தார்.

எந்தவொரு அரசியல் வாதிக்கும் அடிமைப்படாமல் துணிச்சலாக எழுதி அதனை எங்கள் போன்றவர்களுக்கும் சொல்லிக் கொடுத்தவர்தான் எஸ்.டி.சிவநாயகம் ஐயா அவர்கள்….

.எல்.ஜுனைதீன்
ஊடகவியலாளர்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top