பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என்று
நான் நம்பவில்லை
ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு


தற்போதைய புள்ளிவிபரங்களைக் கருத்தில் கொண்டு எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி இலங்கையில் பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என்று தான் நம்பவில்லை என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தி இந்து பத்திரிகைக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த செவ்வியில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர், கொரோனா வைரசை ஒழிக்க தெற்காசியாவுக்கு ஒரு மனிதாபிமான பொறிமுறை அவசியம் என கூறினார்.

இதன்போது பொறுப்புள்ள சார்க் அமைப்பு அதன் பிரதான பங்கை வகிக்க வேண்டும் எனவும் அதில் இந்தியா ஒரு முக்கிய வகிபாகத்தை வகிப்பது அவசியம் எனவும் அவர் கூறினார்.

இந்த நிலைமையை நேபாளத்தின் காத்மாண்டுவில் இருந்து மாத்திரம் கையாள முடியாவிடின் இந்தியாவின் பெங்களுர் மற்றும் இலங்கையின் கொழும்பு நகரை அதற்கு பயன்படுத்தலாம் எனவும் அவர் கூறினார்.

உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான நாடுகள் கொவிட் 19 வைரஸின் பரவலுக்கு முகம் கொடுத்துள்ள நிலையில், சிறந்த சுகாதார வசதிகளை கொண்ட இலங்கை மற்றும் கேரளா ஆகியவை ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் சார்க் அமைப்பில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

1990 என்ற துரித நோயாளர் காவு வண்டிகளை இலங்கைக்கு வழங்கிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நன்றியோடு நினைவு கூறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு பொதுத் தேர்தலை எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி நடத்த தீர்மானித்துள்ளமை தொடர்பாகவும் தி ஹந்து பத்திரிகையின் ஊடகவியலாளர் இதன்போது வினவியுள்ளார்.

இதற்கு பதிலளித்த அவர், எதிர்க்கட்சிகள் பல இந்த செயற்பாட்டுக்கு எதிர்ப்பை தெரிவித்துள்ளதாகவும், இலங்கையில் கொவிட் - 19 பரவல் குறித்த தற்போதைய புள்ளிவிபரங்களை கருத்தில் கொண்டு தேர்தலை திட்டமிட்டபடி நடத்த முடியுமா என்பதில் சந்தேகமுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top