குழந்தைகளையும்
புத்தகம் படிக்க வைப்போம்!
இன்று உலக புத்தக தினம்
குழந்தைப் பருவம் கொண்டாட்டமானது. அந்த கொண்டாட்ட மனநிலை சற்று மாறி குழந்தைமையை தொலைத்து விட்டு வயதிற்கு மீறிய முதிர்ச்சியை இன்றைய பெரும்பான்மையான
குழந்தைகளிடம் காண முடிகிறது. பெருகி வரும் சமூக ஊடகத்தின் தாக்கமே இதற்கு காரணமாக
உள்ளது.
படிக்கும் பழக்கம் குழந்தைகளிடம் அருகிப் போய் விட்டது. அதற்கான ஆர்வத்தை பெற்றோரும் ஏற்படுத்துவதில்லை. புத்தகம் என்றாலே அது பாடப் புத்தகம் மட்டுமே என்ற சிந்தனையே பலரிடம் உள்ளது. அதனாலேயே அதனைப் பெரிதாக கண்டு கொள்ளாத பெற்றோராக மாறி வருகிறோம்.
பெரியவர்களிடமே வாசித்தல் இல்லை எனும் போது குழந்தைகளை எப்படி பழக்கப் படுத்த முடியும். அவர்களின் கைகளில் அலைபேசி இருப்பதைக் கண்டு அதிசயிப்பதில்லை நாம். காட்சி வடிவிலேயே காணும் குழந்தைகளுக்கு கற்பனைத் திறன் வளர்வதில்லை. வாசித்தல் அற்புதமான அனுபவம்.
குழந்தைப் பருவத்தில் வாசிக்கும் பழக்கத்தை அறிமுகப்படுத்தி விட்டாலே போதும். வளர வளர படிக்கும் ஆர்வம் தானாகவே வரும். புத்தகங்களைப் படிக்கும் குழந்தைகள் இயல்பாகவே அறிவுத் திறனையும், கற்பனை ஆற்றலையும்,
நினைவாற்றலையும் பெற்று விடுகின்றனர்.
இத்தகைய ஆற்றலால் பள்ளிப் பாடங்கள் படித்தல் கூட எளிதாக வசப்பட்டு விடுகிறது.
படிக்கும் போதே மகிழ்ச்சியைத் தருவது புத்தகங்கள் என்பது மறுக்க இயலாத உண்மை.
புத்தகங்களைப் படிக்கும் குழந்தைகள் அதில் வரும் பாத்திரங்களை மனதில் காட்சிப் படுத்தும் போதே கற்பனைத் திறன் விரிவடைகிறது. மனம் சோர்ந்திருக்கும் போது ஊக்கத்தையும் தருவது புத்தகங்கள் தான்.
அறம் சார்ந்த சிந்தனைகளையும் சமூகம் சார்ந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முயல்வது புத்தகங்கள். ஒரு குழந்தையை நேரிய வழியில் நடக்க வைப்பதற்கும் சிறந்த சமூக செயற்பாட்டாளானாக அவனை உருவாக்குவதிலும் பங்கு வகிப்பது
புத்தகங்களே.
புத்தகம் வாசிக்கும் பழக்கத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் உலகம் முழுவதும் இன்று உலக புத்தக தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்கான பயிற்சியாக புத்தக வாசிப்பு இடம்பெறுகிறது. புத்தகத்தை வாசிப்பதன் மூலம் நமது மூளை சிறப்பாகவும், கூர்மையாகவும் செயல்படும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் தொழில்நுட்பத்தன் வளர்ச்சி காரணமாக வாசிப்பின் முக்கியத்துவம் குறைந்து வருகிறது.
தொலைக்காட்சி, இணையதளம் போன்றவற்றின் தாக்கம் அதிகரித்து வருவதே இதற்கு ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ஆனால் வாசிக்கும் பழக்கத்தை குழந்தை பருவத்தில் இருந்தே ஊக்குவிக்க வேண்டும்.
புத்தகம் வாசிப்பது என்பது படிப்பு, வேலைக்கான உத்தரவாதம் அல்ல. அன்றாட வாழ்க்கையில் இயல்பான செயல்பாடாக இருக்க வேண்டும்
0 comments:
Post a Comment