அரசியலமைப்பு மாற்றம் தொடர்பில்

யோசனைகள் சமர்ப்பிக்காத முஸ்லிம் தலைமைகள்


உத்தேச அரசியலமைப்புத் திருத்தம் அல்லது அரசியலமைப்பு மாற்றம் தொடர்பில் முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஒன்றேனும் இதுவரையில் லால் விஜேநாயக்க தலைமையிலான அரசியலமைப்பு மாற்றம் தொடர்பில் ஆலோசனை பெறறுக் கொள்ளும் ஆணைக்குழுவிடம் தமது யோசனைகளை சமர்ப்பிக்கவில்லை என கவலை தெரிவிக்கப்படுகின்றது.
பெரும்பான்மைக் கட்சிகளும் அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான சிறுபான்மை தமிழ்க் கட்சிகளும் உரிய வேளைக்குள் தத்தமது யோசனைகளை சமர்ப்பித்திருக்கும் நிலையில் முஸ்லிம் கட்சிகள் தனித்தோ, ஒன்றுபட்டோ எந்த யோசனைகளையும் முன்வைத்ததாக தெரியவில்லை.
முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தளவில் காலம் கடந்து கைசேதப்படுவது பழக்கப்பட்ட விடயமாகவே உள்ளது.
ஆலோசனை பெற்றுக்கொள்ளும் ஆணைக்குழுவின் காலக்கெடு முடிவடையும் நிலைக்கு வந்திருக்கும் நிலையில் இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் செயற்படும் சிவில் சமூக நிறுவனங்களினதும் துறைசார்நிபுணர்களினதும் கூட்டு முயற்சியினால் உருவாக்கப்பட்ட தேசிய ஷூரா சபை , ஜமாஅதுஸ் ஸலாமா போன்ற ஒருசில முஸ்லிம் அமைப்புகள் தமது யோசனைகளை முன்வைத்திருக்கின்றன.
ஆனால் முஸ்லிம் அரசியல் கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸோ, அகில இலங்கை மக்கள் காங்கிரஸோ ஏனைய அரசியல் தரப்புகளோ இதுவரையில் மௌனம் கலையாமலேயே இயங்கிக் கொண்டிருக்கின்றன.
மீதமிருக்கின்ற குறுகிய காலத்துக்குள் இக்கட்சிகள் துரிதமாகச் செயற்பட வேண்டியதன் அவசியத்தை அக்கட்சிகளின் தலைமைகள் உணர்ந்து செயற்படுவார்களா என்ற எதிர்பார்ப்புடன் முஸ்லிம் சமூகம் காத்துக் கொண்டிருக்கின்றது.
இதற்கிடையில் இந்த புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்காக அரசியலமைப்பு நிர்ணய சபை எதிர்வரும் 5 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதற் தடவையாக பாராளுமன்றத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவிருக்கின்றது.
இந்த அரசியலமைப்பு நிர்ணய சபையானது இலங்கையின் இரண்டாவது அரசியலமைப்பு நிர்ணய சபையாகும். முழு பாராளுமன்றமும் அரசியலமைப்பு சபையாக மாற்றம் பெற்று மொத்த உறுப்பினர்களான 225 பேரும் கூடி புதிய அரசியலமைப்பு குறித்து ஆராயவுள்ளனர்.
2017 ஆம் ஆண்டில் புதிய அரசியல் யாப்பை அறிமுகப்படுத்தும் நோக்கிலேயே இச்சபை செயற்படவுள்ளது. புதிதாக ஒரு அரசியல் யாப்பைத் தயாரிப்பதா? அல்லது இருக்கும் யாப்புக்கு வலுவான திருத்தங்களை உள்வாங்கி அதனை பலப்படுத்துவதா என்பது குறித்த உறுதியான முடிவெதுவும் இதுவரையில் எடுக்கப்படவில்லை.
அரசியலமைப்பு நிர்ணய சபை செயற்படத் தொடங்கும் போது முஸ்லிம் கட்சிகளின் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்பு எவ்வாறானதாக இருக்கப் போகின்றது அவர்களின் வகிபாகம் என்னவாக இருக்கப் போகின்றது? என்பதே இன்றைய கேள்வியாக உள்ளது.
காலாகாலமாக முஸ்லிம் தரப்புகள் முட்டி மோதிக்கொண்டு கட்சி ரீதியில் பிளவுபட்டு நீயா? நானா? என்ற வீணான பிடிவாதப் போக்குகளால் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட பின்னடைவு, தோல்விகளை தொடர்ந்தும் எதிர்கொள்வதா? அல்லது அனைவரும் ஒன்றுபட்டு ஒரே முடிவை ஏகமனதாக எடுத்து அதில் வெற்றி காண்பதா? என்ற தீர்க்கமான முடிவுக்கு முஸ்லிம் அரசியல் தலைமைகள் வரவேண்டும்.
தமக்கிடையே ஒருமித்த கருத்து உருவாக வேண்டியது கட்டாயமானதாகும். சிவில் சமூகத்தைவிட பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 21 முஸ்லிம் உறுப்பினர்களும் ஒன்றுபட வேண்டும். இவர்களின் கைகளில்தான் முஸ்லிம்களின் அரசியல் இருப்பு தங்கியுள்ளது.
கட்சி அடிப்படையில் முஸ்லிம்கள் நான்கு கட்சிகளிலும் உள்ளனர். அரசியலமைப்பு விடயத்தில் நாம் பிரிந்து நிற்க முடியாது. ஒன்றுபட்டே ஆக வேண்டும்.
சமூகத்தின் எதிர்காலம், அரசியல் இருப்பு, பாதுகாப்பு என்பவற்றை நாம் உறுதி செய்து கொள்ள வேண்டும். கட்சி ரீதியில் முரண்படுவதைவிட நாம் மக்கள் சக்தியாக மாற வேண்டும்.
பெரும்பான்மையினரின் மனதை வெல்லக்கூடியதான பிரேரணைகள் எம்மால் முன்வைக்கப்பட வேண்டும். இதனைத் தனித்துச் செய்வதைவிட சகல தரப்புகளும் ஒன்றுபட்டுச் செய்வதன் மூலம் முஸ்லிம் சமூகம் பலமடைய முடியும்.
முஸ்லிம் சமூகம் தேசிய நீரோட்டத்தோடு இணைந்து பயணித்தாலும் அந்தச் சமூகம் கரைந்து போய்விடாத வகையிலான உறுதியானதும், நிலையானதுமான முடிவுகளை எடுத்தாக வேண்டும்.

நியாயமான விடயங்களில் விட்டுக் கொடுத்து தமது அரசியல் இருப்பு, உரிமைகளை பாதுகாப்பதில் முஸ்லிம் தலைமைகள் பொறுப்புணர்ந்து செயற்பட வேண்டும். இதனையே மக்கள் எதிர்பார்க்கின்றனர்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top