கட்சியின் அனைத்து அதிகாரமும் கொண்ட

 செயலாளராக மன்சூர் காதர்?

அதியுயர்பீட கூட்டத்தில்நிறைவேற்றப்பட்ட தீர்மானம்

தவிசாளர் பதவியை ஹசன் அலிக்கு கொடுக்க முயற்சி !

தலைவரை முஸாபா செய்துவிட்டு ஹசனலி வெளியேறினார்



இன்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பேராளர் மாநாடு நடைபெற இருக்கின்றது. நேற்று.. கட்டாய அதியுயர்பீட கூட்டம் கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாத்தில் நடைபெற்றது
கடந்த வாரம் கட்சியின் தவிசாளராக இருந்த பசீர் சேகுதாவூத் அவர்களை அப்பதவியிலிருந்து இடை நிறுத்தியதனால், அடுத்த தவிசாளராக யாரை நியமிக்கப்போகின்றார்கள் என்ற பலரது எதிர்பார்ப்புக்கு மத்தியில் மிகவும் அமைதியான முறையில் அதியுயர்பீட கூட்டம் நடைபெற்றது.
கடந்த காலங்களில் இருந்த பதவி நிலைகளில் எந்தவித மாற்றங்களும் இடம்பெறவில்லை. அதாவது கட்சியின் தலைவராக ஏகமனதாக அமைச்சர் ரவுப் ஹக்கீம் அவர்கள் தெரிவு செய்யப்பட்டதுடன் ஏனய அனைத்து பதவிகளும் மாற்றம் இன்றி தெரிவு இடம்பெற்றது.
அத்துடன் வெற்றிடமாக உள்ள கட்சியின் தவிசாளர் பதவிக்கு செயலாளர் நாய்கம் பதவியை மீண்டும் தருவதாக வாக்குறுதி வழங்கப்பட்டிருந்த எம்.ரி ஹசன் அலி அவர்களை ஏற்றுக்கொள்ளுமாறு தலைவர் உட்பட அதியுயர்பீட உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக வேண்டுகோள் விடுத்தார்கள். ஆனால் அதனை ஏற்றுக்கொள்ள ஹசன் அலி அவர்கள் மறுத்துவிட்டார்.
மேலும் அதியுயர்பீட கூட்டம் நிறைவடைந்த பின்பு தலைவரை முஸாபா செய்துவிட்டு ஹசனலி அவர்கள் சென்றுவிட்டார். ஆனால் அவரை சமரசப்படுத்தும் முயற்சியில் சில உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.
இதற்கிடையில் கடந்தமுறை யாப்பு திருத்தத்தின் மூலம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்த முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் பதவியானது ஒரே நபரின் தலைமையின் கீழ் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது கட்சியின் அனைத்து அதிகாரமும் கொண்ட செயலாளராக மன்சூர் காதர் ஏகமனதாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொள்கை பரப்பு பிரதிச் செயலாளராக மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி அலி ஸாஹிர் மௌலானா புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் ரவூப் ஹக்கீமே தொடர்ந்தும் கட்சியின் தலைவராகச் செயற்பட வேண்டுமென உயர்பீட உறுப்பினர்கள் ஏபகமனதாக தெரிவித்ததனையடுத்து அல்லாஹு அக்பர் என கூறப்பட்டு அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது

நேற்றைய அதியுயர்பீட கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளும் அதியுயர்பீட உறுப்பினர்களினால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அல்லாஹ் அக்பர் என்று கூறி சுமூகமான முறையில் முசாபா செய்துவிட்டு கலைந்து சென்றார்கள். நேற்றைய அதியுயர்பீட கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இன்று நடைபெறும் பேராளர் மாநாட்டில், பேராளர்கள் முன்பாக சமர்ப்பிக்கப்படும், பேராளர்கள் அல்லாஹ் அக்பர் என்று கூறி ஏற்றுக்கொண்டதன் பின்பு தேர்தல்கள் ஆணையாளருக்கு அனுப்பிவைக்கப்படும் எனத் தெரியவருகின்றது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top