அமைச்சர் விஜேதாச ராஜபக்ச ஞானசார தேரருக்கு அடைக்கலம் கொடுத்து வைத்துள்ளார் என்று குற்றஞ்சாட்டப்பட்ட போது, இக்குற்றச்சாட்டை எதிர்கொள்வதற்கும் தனது செயலை மூடி மறைப்பதற்கும் அமைச்சர் றவூப் ஹக்கீமை துணைக்கு அழைத்துள்ளார். அதாவது, ஹக்கீம் 2010 ஆம் வருடத்தில் இருந்து 2014 வரை நீதியமைச்சராக இருந்தார். அக்காலத்துக்குள்தான் அழுத்கம சம்பவம் நடந்தது அப்போது ஞானசாரரை அவரா மறைத்து வைத்திருந்தார் என்ற கருத்துப்பட கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அமைச்சர் விஜேதாச அவர்களே!
1) அழுத்கம சம்பவத்தின் பின் தேரர் தலைமறைவாயிருக்கவில்லை என்பதை தெரியாதிருக்கிறீர்கள்.
2) அழுத்கம அழிவுக்கு ஞானசார தேரர்தான் காரணம் என்பதை பகிரங்கமாக ஏற்கிறீர்கள்.
3) முஸ்லிம் தீவிரவாதிகளை முஸ்லிம் அமைச்சர்கள் மறைத்து வைத்துள்ளார்கள் எனப் பொருத்தமாகப் பொய் சொல்வதற்கு எவரையோ தயார்படுத்துகிறீர்கள்.என்பனவற்றை நடுவு நிலையாளர்களால் புரிந்து கொள்ள முடிகிறது.
வி.ரா. அமைச்சரே!
* இந்த அரசாங்கத்தில் நீங்கள் வகிக்கும் பதவி நிலை போல கேள்விக்குட்படுத்தப்படாத நீதி மற்றும்,கேள்விக்குட்படுத்த முடியாத புத்தசாசனம் ஆகிய விடயதானங்களை உள்ளடக்கியதாக அன்றைய அரசாங்கத்தில் ஹக்கீமின் அமைச்சு அமைந்திருக்கவில்லை.
* மேலும், நீங்கள் இன்று கொண்டிருக்கும் அதிகாரத்தைப் போல - தற்றுணிவோடு, சட்டத்துக்குப் புறம்பாக செயலாற்றியபடி நீதியமைச்சராக இயங்கும் அதிகாரத்தை அன்று றவூப் ஹக்கீம் கொண்டிருந்ததில்லை.
* இன்னும், நீங்கள் இந்த அமைச்சை வைத்துக் கொண்டு இயங்கும் தன்மையைப் பொறுத்து, பௌத்த சிங்கள மக்களுக்குள் செல்வாக்கைப் பெருக்கிக் கொள்வதன் மூலம் உங்களுடைய தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரலில் உள்ளடங்கியுள்ள "எதிர்காலத்தில் தேசத்தின் தலைமையைக் கைப்பற்றும்" எந்தவொரு மறைமுகத் திட்டமும் ஒரு சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர் என்ற வகையில் ஹக்கீமுக்கு இருந்திருக்க வாய்ப்பில்லை என்பதனால் ஞானசார தேரரை மறைத்து வைக்கும் தேவை உங்களைப் போல் அவருக்கில்லை.
ஆகிய மேற் சொன்ன எனது அவதானங்களை தங்களுக்குச் சமர்ப்பிக்க விரும்புகிறேன்.
** 2010 ஆம் ஆண்டு ஹக்கீம் நீதியமைச்சராகவும், நான் உள்நாட்டு வர்த்தகப் பிரதியமைச்சராகவும் பிரமாணம் எடுத்துக் கொண்டு வெளியேறும் தருணம் அமைச்சர் ஹக்கீமிடம் பின்வருமாறு கூறினேன்.
" தலைவரே! உங்களுக்கு 'நீதி'யில் "பாதி" எனக்கு 'பாதி'யில் "நீதி"
உடனே, வெளியில் யாருடமும் இப்படிக் கூறிவிடாதீர்கள் என்று அவர் என்னைக் கேட்டுக் கொண்டார்.
நான் இதனை "புரவலர் " ஹாஷிம் உமர் அவர்களிடம் மட்டுமே கூறினேன். இன்றும் உமர் என்னைக் காணும் போதெல்லாம் பாதி என்றே அழைக்கிறார்.
அப்போது நீதியமைச்சில் இருந்த முக்கிய அரைவாசி திணைக்களங்களை அன்றைய ஜனாதிபதி தன்வசம் எடுத்துக் கொண்டே ஹக்கீமுக்கு வழங்கியிருந்தார். நான் அரை அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தேன். இதனை வைத்தே மேற்கூறிய எனது கூற்றை "அன்றைய" எனது தலைவரிடம் கூறுனேன்.
நமது கட்சிக்குள் உட்கட்சி ஜனநாயகம் கிஞ்சித்தும் கிடையாது, கட்சியின் புதிய யாப்புத் திருத்தங்களால் தனி மனிதன் வீங்கி வெடிக்கப் பார்க்கிறார்,சமூகத்தின் நலனுக்கும் - நீதிக்கும் - பாதுகாப்புக்குமான குரல் "கம்மி " விட்டது, கட்சியின் தீர்மானிக்கும் சக்தி சுயநலமிகளின் கைகளுக்கு மாறிவிட்து. எனவேதான் நாம் தூய்மையாக்கல் செயல்பாடுகளில் இறங்கியிருக்கிறோம்.
ஆனால் எந்த தனி முஸ்லிம் தலைவர்களையும் காரணம் காட்டி சமூகத்தின் மீது நசுக்கும் பாய்ச்சலை நிகழ்த்த முற்படும் எவருக்கும் எதிராக கருத்துப் போர் தொடுப்பதிலும், இராஜ தந்திர முன்னெடுப்பகளைச் செய்வதிலும் நாம் பின்னிற்கப் போவதில்லை.

அமைச்சர்களான றவூப் ஹக்கீமையோ, றிஷாட்டையோ அல்லது முதலமைச்சர் விக்னேஸ்வரனையோ, சிவாஜிலிங்கத்தையோ கைது செய்யவேண்டும் எனக் குரல் கொடுக்கும் சிங்கள அரசியல் தலைவர்களை முதலில் கைது செய்யத் தகுந்த நிறையக் காரணங்கள் உண்டு என்பதை உரத்துச் சொல்லும் தருணமிது.மாற்று மருந்தை தயாரிக்கும் காலமிது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top