அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில் கடந்த 20 ஆண்டாக நடைபெற்று வந்த ரமழான் பெருநாள் வைபவங்கள், இந்தாண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா நாட்டின் வெள்ளை மாளிகையில் ஒவ்வொரு ஆண்டும் ரமழான் பெருநாள் வைபவங்கள் சிறப்பாக நடைபெற்று வருவது வழக்கம். அமெரிக்க ஜனாதிபதியாக தாமஸ் ஜெபர்சன் இருந்தபோது, வெள்ளை மாளிகையில் முதல் முதலாக 1805 ஆம் ஆண்டு ரமழான் பெருநாள் வைபவங்கள் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக துனீசியா நாட்டு தூதர் கலந்து கொண்டார். அதைதொடர்ந்து, வெள்ளை மாளிகையில் ரமழான் பெருநாள் வைபவங்கள் இடைவெளி விட்டு நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, வெள்ளை மாளிகையில் 1996 முதல் தொடர்ந்து 20 ஆண்டுகள் தொடர்ச்சியாக ரமழான் பெருநாள் வைபவங்கள் நடைபெற்று வந்தது. 1996ல் நடைபெற்ற ரமழான் பெருநாள் விருந்தில் ஹிலாரி கிளிண்டனும், 1999ல் நடைபெற்ற ரமழான் பெருநாள் விருந்தில் மாகாண உறுப்பினர்கள், முக்கிய தலைவர்களும், அடுத்தடுத்து நடைபெற்ற விருந்துகளில் ஜார்ஜ் புஷ், பாரக் ஒபாமா உள்ளிட்ட ஜனாதிபதிகளும் பங்கேற்று சிறப்பித்தனர். 2009ம் ஆண்டை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் வெள்ளை மாளிகையில் ரமழான் பெருநாள் வைபவங்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் ஜனாதிபதி பாரக் ஒபாமா பங்கேற்று சிறப்பித்து இருந்தார். அப்போது பேசிய ஒபாமா, ‘அமெரிக்காவின் வளர்ச்சியில் இஸ்லாமியர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது’ என தெரிவித்திருந்தார். இதற்கிடையே, வெள்ளை மாளிகையில் கடந்த சனிக்கிழமை அன்று வெளியான அறிக்கையில், அமெரிக்காவில் வாழும் இஸ்லாமிய பெருமக்களுக்கு ரமழான் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. அவர்களது வாழ்வில் அமைதியும், நல்லிணக்கமும் நிலவ வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான ரமழான் பெருநாள் வைபவங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த ரமழான் பெருநாள் வைபவங்கள் புதிய அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்ற டொனால்டு டிரம்ப் ரத்து செய்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், இந்த ஆண்டின் தொடக்கத்தில் 7 முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்களுக்கு அமெரிக்காவில் நுழைய தடை உத்தரவு பிறப்பித்தார். ஜனாதிபதியின் உத்தரவை எதிர்த்து முஸ்லிம் அமைப்புகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அதன்பின்னர், டிரம்பின் உத்தரவுக்கு நீதிபதிகள் தற்காலிக தடை விதித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top