மூடநம்பிக்கையால் தன் மூன்று வயது மகளின் காதுகளை அறுத்த அமித் பகதூர் என்பவரை டெல்லி பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இந்தச் சம்பவம்குறித்து பொலிஸ தரப்பில் கூறியிருப்பதாவது,
’அமித் பகதூர் என்பவர் கிழக்கு டெல்லியிலுள்ள ஷாஹ்தாராவில் குடும்பத்துடன் வசித்துவருகிறார். நேற்று அதிகாலை, திடீரெனத் தன் மூன்று வயது மகளின் காதுகளை கத்தியால் அறுக்க முற்பட்டுள்ளார்.
குழந்தை, வலியில் கதறியுள்ளது. உடனே பகதூரின் மனைவி அவரிடமிருந்து குழந்தையை மீட்க முயன்றுள்ளார். மனைவியையும் அவரின் மற்ற குழந்தைகளையும் இழுத்துக்கொண்டுபோய் அறையில் அடைத்துப் பூட்டிவிட்டு, மீண்டும் குழந்தையின் காதுகளை அறுக்க முயற்சிசெய்துள்ளார்.
பின்னர் கழுத்திலும் கத்தியால் காயம் ஏற்படுத்தியுள்ளார். அவரின் மனைவி கத்திக் கூச்சலிட்டதால், அருகில் வசிப்பவர்கள் விரைந்துவந்து குழந்தையை மீட்டு, பகதூரைப் போலீஸில் ஒப்படைத்துள்ளனர்.
பொலிஸ் விசாரணையில், குழந்தையின் காதுகளை அறுத்ததற்கு அவர் கூறிய காரணம் அதிர்ச்சியடையவைத்துள்ளது.
அவரிடம் பேய் பேசியதாம்; குழந்தையின் காதுகளைக் காணிக்கையாகக் கேட்டதாம். குழந்தையை அழவைக்க வேண்டும், இல்லையென்றால் குழந்தையைக் கொன்றுவிடுவதாக மிரட்டியதாம். குழந்தையின் நல்லதுக்காகத்தான் இவ்வாறு செய்ததாக பகதூர் கூறியுள்ளார்.
பகதூரின் இந்த மூடநம்பிக்கைகுறித்து பொலிஸாரிடம் பேசிய அவரின் மனைவி, ''கடந்த சில நாள்களாகவே அவர் பேயுடன் பேசுவதாகக் கூறுகிறார். குழந்தையின் காதை அறுக்கும்போதும் தனியாகப் பேசிகொண்டே அறுத்தார். காதுகளைக் காணிக்கை தந்துவிடுகிறேன், என் குழந்தையை விட்டுவிடு என்று கதறினார்’' என்று அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
பகதூரால் படுகாயமடைந்த குழந்தைக்கு, எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. உயிருக்கு ஆபத்து இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment