இலங்கையிலும் உலகில் பல்வேறு நாடுகளிலும் வசிக்கும் முஸ்லிம்கள் முன்னொரு போதும் இல்லாதளவு சோதனைகளுக்கும், வேதனைகளுக்கும் முகம்கொடுத்துள்ள நிலையில் புனித நோன்பின் முடிவில் 'ஈதுல் பித்ர்' எனப்படும் ஈகைத் திருநாளை கொண்டாடும் இவ்வேளையில் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்கு அல்லாஹ்வை பிரார்த்திப்போமாக என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள 'ஈதுல் பித்ர்' வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள 'ஈதுல் பித்ர்' செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையை பொறுத்தவரை முஸ்லிம்களாகிய நாம் இஸ்லாம் வலியுறுத்தும் சகிப்புத்தன்மையின் உச்சக்கட்டத்தில் பொறுமையைக் கையாண்டு, இனரீதியாக இழைக்கப்படும் அநீதிகளுக்கு மத்தியிலும் வெள்ளப்பெருக்கு, மண்சரிவு போன்ற அனர்த்தங்களுக்கு மத்தியிலும் ஒரு மாதகால நோன்பை நிறைவு செய்த திருப்தியில் இன்னொரு பெருநாளை சந்திக்கின்றோம்.
இவ்வாறான சூழ்நிலையில் கடந்த ஆட்சிக்காலத்தில் போலல்லாது, நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் நீதியும், நியாயமும் நிலைநாட்டப்படும் என்ற எதிர்பார்ப்பில் அல்லாஹ்வின் மீதுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையில் இந்நாட்டு முஸ்லிம்களாகிய நாங்கள் இக்கட்டான நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
அத்துடன் மூன்று தசாப்தகால கோரயுத்தம் முடிவடைந்து, நாட்டில் அமைதி நிலவுவதாக கூறப்படுகின்ற போதிலும், வடகிழக்கிலிருந்து இடம்பெயர்ந்த பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் உரிய முறையில் மீள்குடியேற்றப்படுவது இன்னமும் கேள்விக்குறியாகவே இருப்பதையும் இந்த பெருநாள் தினத்தில் நினைவூட்டுகின்றோம்.
அல்குர்ஆன் இறங்கிய இந்த மாதத்தில் ரமழான் நோன்பின் பயனாக கூட்டாகவும், தனியாவும் நாம் மேற்கொண்ட இறைவணக்கங்களினால் எமது வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக.
ஈத் முபாரக்!
0 comments:
Post a Comment