நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம் மேலோங்கியிருக்கின்ற சூழலில் நமக்காக துணிந்து குரல் கொடுக்கின்ற அரசியல் தலைமைத்துவத்தின் கீழ் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத் தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதி தலைவருமான கலாநிதி .எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது;
எந்த இனவாத பூதத்தின் நெருக்குவாரங்களுக்காக முஸ்லிம்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பி, அதற்காக அணிதிரண்டு ஒட்டுமொத்தமாக வாக்களித்தார்களோ, அதே இனவாத பூதம் இந்த நல்லாட்சியிலும் முஸ்லிம்கள் மீது அட்டூழியங்களை கட்டவிழ்த்து விட்டு, அடக்கியொடுக்க எத்தனித்திருப்பதானது எமக்கு பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இனவாத சக்திகளுக்கு நல்லாட்சி அரசாங்கம் அடிபணிந்திருப்பதானது இந்த ஆட்சியை கொண்டு வந்த முஸ்லிம்களின் பாதுகாப்பையும் இருப்பையும் கேள்விக்குறியாக்கியிருக்கிறது. இதனால் நாம் இன்று அரபு நாடுகளினதும் சர்வதேசத்தினதும் கவனத்தை ஈர்க்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளோம்.
இதற்காக முன்னிற்கின்ற சமூகத்திற்கான மாற்று அரசியல் இயக்கத்தையும் இஹ்லாஸ் எனும் தூய எண்ணத்துடன் செயற்படுகின்ற துணிச்சல், ஆற்றல், ஆளுமை, நேர்மை மிகுந்த தலைமைத்துவத்தையும் பலப்படுத்த வேண்டிய தேவை எழுந்திருப்பதை முஸ்லிம்கள் அனைவரும் இந்த இக்கட்டான தருணத்தில் உணர்ந்து செயற்பட முன்வர வேண்டும்.

முப்பது நாட்கள் நோன்பு நோற்று இறைபக்தியுடன் நல்ல சிந்தனைகள் ஊற்றெடுக்கின்ற இப்புனிதமிகு நாளில் சமூகத்தின் விடுதலைக்காகவும் எழுச்சிக்காகவும் கொள்கை ரீதியாக ஒன்றிணைய திடசங்கற்பம் பூணுவோம். அனைத்து உள்ளங்களுக்கும் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

ஈத்முபாரக்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top