யுத்தத்தின் வடுக்களால் மோசமாக பாதிக்கப்பட்டு தலைதூக்க முடியாத பிரதேசமாகவுள்ள மடுவை முன்னேற்ற வேண்டிய கடப்பாடும், பொறுப்பும் நமக்கு உள்ளது என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
மன்னார் - மடு பிரதேசத்தில் அமைந்திருக்கும் கீரி சுட்டான் கிராமத்தில் பல்வேறு தேவைகளை இனங்கண்டு தீர்த்து வைப்பது தொடர்பிலான கலந்துரையாடலொன்று நேற்று கீரி சுட்டான் கிராமத்தில் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
மன்னார் மாவட்டத்தில் குறிப்பாக, மடு பிரதேசத்திலே யுத்தம் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்ததை நாம் அறிவோம். இதனால் மடுவின் கல்வி வளர்ச்சி பின்னடைந்தது.
கடந்த காலங்களில் வடமாகாண முன்னாள் ஆளுநரின் உதவியுடன் இந்தப் பிரதேசத்திற்கு யாழிலிருந்து ஆசிரியர்களை வரவழைத்து கல்வியை ஊக்கப்படுத்தினோம்.
அரச அதிகாரிகளும், அலுவலர்களும், ஆசிரியர்களும் இந்தப் பகுதியில் பணி புரிவதற்கு தயக்கம் காட்டிய ஒருகாலம் இருந்தது. அந்த நிலை இப்போது மாறிவருவது மகிழ்ச்சி தருகின்றது. மடு பிரதேச கல்வி வளர்ச்சியில் முன்னேற்றம் காண்கின்றோம்.
இந்த கிராமத்தின் வைத்திய வசதி கருதி ஆரம்ப மருத்துவப் பிரிவொன்றை அமைத்து தரும் வகையில் 2018ஆம் ஆண்டிற்குள் அந்த திட்டத்தை உள்வாங்குமாறு மாகாண சுகாதார பணிப்பாளரை கோரியுள்ளேன் என ரிஷாட் பதியுதீன் கூறியுள்ளார்.
குறித்த கூட்டத்தில் மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஆயர் ஜோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை, மடு பங்குத்தந்தை மதன்ராஜ், உதவிஅரசாங்க அதிபர் நந்தினி ஸ்ரான்லி டி மேல் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
0 comments:
Post a Comment