சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு தேசிய வைபவமொன்று நாளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இந்தத் தகவலை வெளியிட்டார்.
ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு கருத்தை கொண்டு இத்தினம் கொண்டாடப்படுகின்றது. இம்முறை அனைவரையும் பாதுகாக்கும் கூட்டுறவு என்பது இந்த வருடத்திற்கான தொனிப் பொருளாகும்.
இதனை முன்னிட்டு இடம்பெறும் தேசிய வைபவம் ஜனாதிபதி தலைமையில் நாளை குருநாகல் மாளிகாபிட்டிய விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
15 ஆயிரத்திற்கும் அதிகமான கூட்டுறவுச் சங்கப் பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.
சர்வதேச கூட்டுறவு ஸ்தாபனம் ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் முதலாவது சனிக்கிழமையை சர்வதேச கூட்டுறவு தினமாக பிரகடனப்படுத்தியது.
கூட்டுறவுத் துறை இலங்கை வரலாற்றில் முக்கிய இடம் பிடித்துள்ளது என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். திறந்த பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் மக்களுக்கு பல சவால்களை எதிர்கொள்ள நேரிட்டது. அந்த சவால்களை வெற்றி கொள்வதற்கு கூட்டுறவுத்துறை மிகுந்த உதவிகளை வழங்கி வருகிறது. தேசிய ரீதியில் கூட்டுறவு கொள்கையொன்றை வெளியிடும் நோக்கில் மாகாண கூட்டுறவு அமைச்சுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இதன்போது குறிப்பிட்டார்.

மக்களின் சமூக, பொருளாதார, கலாசார அபிவிருத்திக்காக பாரிய பங்களிப்பு செய்யும் கூட்டுறவுத்துறையை பாராட்டி 1922ம் ஆண்டு சர்வதேச கூட்டுறவு தினம் முதல் தடவையாக கொண்டாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top