மர்ஹூம் முஸ்தபா அமைச்சருக்குப் பிறகு நிந்தவூரின் அபிவிருத்தி தொடர்பில் பல முதலைகள் கண்ணீர் சிந்துவதை குறைந்தது தினம் ஒரு செய்தி என்ற வீதத்திலாவது அறியமுடிகிறது.
என்னதான் அபிவிருத்தி என்ற பெயரில் நிந்தவூரை குட்டிச் சிங்கப்பூராக்கும் நோக்கில் கிளம்பினாலும், சிலகாலம் போனால் அந்த அபிவிருத்திகளின் பெயரால்.. அதை செய்தவர்களின் பெயரால்.. அது "அசிங்கப்பூர்" என்று நமது ஊர் சனங்களாலேயே பெயர் மாற்றப்படும். அதற்கு வைத்தியசாலை சங்கதி தொடங்கி பெட்டைக்குளம் மார்க்கட் வரை பல நூறு எடுத்துக்காட்டுக்களை உதாரணமாக சொல்லி கதையை நீட்டமுடியும் ஆனால் பாவம் மக்கள், இவற்றை கேட்டும் வாசித்தும் புளித்துப்போயிருக்கும் என்று எண்ணி விட்டு விடுகிறேன்.
இவற்றுக்கு ஒட்டுமொத்த காரணம் ஊரில் உள்ள குழு நிலை வாதம், குடும்ப வாதம், கட்சி வாதம் போன்ற பக்கவாதங்களே என்று தாராளமாகச் சொல்லமுடியும் . அது மட்டுமல்லாமல் மத்தியில் இருக்கும் ஒரு அதிமேதகு அமைச்சரின் அல்லது தலைவரின் ஒரு உறைக்குள் பல கத்தியை வைக்கும் குள்ளநரித் தந்திர வித்தையும் முக்கிய காரணமாக இருக்கிறது. (கோமிஷன் முக்கியம் அமைச்சரே..😉)
ஆளுக்கொரு திட்டமும் ஆளுக்கொரு வட்டமுமாக(சங்கம்) ஊர் வளங்களையும், சிந்தனை ஜீவிகளையும் துண்டாடி விஜய் டீவி கோபிநாதின் "நீயா ?? நானா??"" நிகழ்ச்சியை நிந்தவூரிலே பரீட்சித்துப் பார்க்கும் நாடகம் ஒரு பக்கம் நடத்த , இவற்றுக்கு மத்தியில் சில வைக்கோல் கற்றையில் படுக்கும் நாய்களும் கூட இணைந்து ஊரை நாசப்படுத்திக் கொண்டிருப்பது வேதனைக்குரியது.

வயதுக்கு வந்து சுமார் 25 வருடங்களுக்கு மேலாக கன்னி கழியாமல் முகமிழந்து பல்லிழந்து கிழவியாக, வரலாற்றுச் சின்னமாக தோற்றமளிக்கும் மர்ஹூம் அமைச்சர் அஸ்ரப் அவர்களின் நிறைவேறாத பெரும் கனவாக சாதனை படித்த நிந்தவூர் கலாச்சார மண்டபத்தின் நிர்மாணத்திற்காக முதற்கட்டமாக சுமார் 72 மில்லியன் நகரத்திட்டமிடல் அமைச்சால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை அறிய முடிகிறது, இது மகிழ்ச்சியூட்டும் செய்தி! . என்றாலும் கண்கட்டி வித்தைபோல பூச்சாண்டி தனமாக காட்டிமறைக்கும் சம்பவங்களும் நிகழ்த்தப்படலாம் என்பது கடந்தகால அனுபவம்.
எப்படியோ இந்த கட்டுமான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டால் குறித்த மண்டபத்திற்கு முன்னால் உள்ள கொங்கிறீட் வீதி, அதற்கு முன்னால் உள்ள சிறுவர் பூங்கா இன்னும் சில அடிகள் நகர்ந்து அரசியல் பழிவாங்கல் என்ற பெயரில் சில சம்பவங்கள் நிகழ்த்தப்படலாம் (அவற்றுக்கான முஸ்திபுகள் மேற்கொள்ளப்படுவதாக அறியமுடிகிறது)
உங்கும்மா உம்மா எங்கும்மா சும்மாவா என்ற பாணியில் NWC எனப்படும் நிந்தவூர் நலன்புரி சங்கத்தினால் கட்டார் நாட்டின் ஒரு நிதியத்தின் உதவியுடன் கலாச்சார மண்டபத்தை ஒத்த கட்டத் தொகுதி ஏற்கனவே குறித்த அமைப்பினால் ஊரின் பல்தேவைக்காக கொள்வனவு செய்யப்பட்டதாக சொல்லப்படும் காணியில் அமைக்கப்பட உள்ளது.
இவ்வாறு ஊர் அபிவிருத்தி தொடர்பில் ஒரு "மைய" சிந்தனை இல்லாமல் செயற்படும் நிலை ஒருவகை தான் தோன்றித்தனதாகவே கருதமுடியும் அவ்வாறு செய்யப்பட்ட அபிவிருத்திகள் மக்களால் கைவிடப்படும் கசப்பான நிலை நமது ஊரிலேயே கண்டு கொண்டிருக்கிறோம்.
எனவே நமது ஊரின் பன்முகப்படுத்தப்பட்ட நிலைபேருடைய அபிவிருத்திகள் மற்றும் முக்கிய தேவைகளை இனங்கண்டு செரியான திட்டங்களை மேற்கொண்டு தனிநபர் விருப்பு வெறுப்பு களுக்கு அப்பால் செயற்படுத்தக்கூடிய ஊரின் அனைத்து சிவில் மற்றும் அரச நிறுவன பிரதிநிதிகளைக் கொண்ட மசூரா சபை ஒன்றின் ஊடாக ஊர் தொடர்பான அனைத்து காரியங்களும் நகர்த்தப்படுமேயானால் குறுகிய காலத்தில் குறுகிய வளங்களைக்கொண்டு உச்ச பயனையும் அபிவிருத்தியையும் அடையமுடியும் என்பது ஊரின் மீது அக்கறை கொண்ட மூன்றாவது தரப்பினரின் ஆதங்கமும் நம்பிக்கையுமாக இருக்கிறது.
எம்..எம். முர்சித்

பட உதவி: ஜெலீல் முஹம்மட்




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top