கொல்கத்தா டெஸ்ட்: 3-வது நாள் ஆட்ட முடிவில்

இலங்கை 165/4; இந்தியாவுக்கு நெருக்கடி

முன்னிலை பெறும் நிலையில் இலங்கை அணி



கொல்கத்தா டெஸ்ட் போட்டியின் 3-ம் நாளான இன்று இந்திய அணியை 172 ஓட்டங்களுக்குச் சுருட்டிய இலங்கை அணி தன் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ஓட்டங்கள் எடுத்து ஓரளவுக்கு நல்ல முன்னிலை பெறும் நிலையில் உள்ளது.
தொடக்க வீரர்கள் கருணரத்ன (8), சமரவிக்ரம (23) ஆகியோரை புவனேஷ்வர் குமார் வீழ்த்த, ஜோடி சேர்ந்த ஆஞ்சேலோ மேத்யூஸ் மற்றும் திரிமானே அபாரமாக ஆடி 3-வது விக்கெட்டுக்காக 99 ஓட்டங்களைச் சேர்த்தனர். இதனையடுத்து இலங்கை அணி வலுவான நிலைக்குச் செல்லக்கூடிய நம்பிக்கையில் 3-ம் நாள் ஆட்டத்தை நிறைவு செய்துள்ளது.
திரிமானே கூறும்போது அவ்வப்போது விளையாடமுடியாத பந்துகள் வந்ததால் எச்சரிக்கையுடன் அணுக வேண்டியதாயிற்று என்று தெரிவித்துள்ளார்.
இன்று வெயில் அடித்தாலும் கடும் ஸ்விங் இருந்தது, பவுன்சும் இருந்தது. அதனை புவனேஷ், ஷமி, உமேஷ் யாதவ் கச்சிதமாகப் பயன்படுத்தினர். சில பந்துகள் மட்டையைக் கடந்து நூலிழையில் சென்றாலும் மேத்யூஸ், திரிமானே இந்திய வீர்ர்கள் போல் பந்தின் திசையில் மட்டையை நீட்டவில்லை. இதனால் சற்றே வெறுப்படைந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் தங்கள் பந்து வீச்சில் சில தவறுகளை இழைத்தனர், இதனால் ஆஃப் வாலி, ஷார்ட் பிட்ச் பந்துகள் சில தளர்வாக விழுந்தன, இதனால் பவுண்டரிகள் வரத்தொடங்கியது.
சதீரா சமரவிக்ரம அனாயசமாகவே ஆடினார் 3 பவுண்டரிகளை இருபுறமும் அடித்து 22 பந்துகளில் 23 ஓட்டங்களை எடுத்து நம்பிக்கையுடன் ஆடிவந்த போது புவனேஷ்வர் குமாரின் பந்து ஒன்றை உடலுக்கு சற்று தள்ளி ஆடியதால் எட்ஜ் ஆகி வெளியேறினார். முன்னதாக கருணரத்ன பந்து வெளியே செல்கிறதா உள்ளே வருகிறதா என்று கணிப்பில் குழம்பி எல்.பி.ஆனார். இந்த 2 விக்கெட்டுகளையும் புவனேஷ்வர் வீழ்த்தினார்.
மேத்யூஸ் ஒருமுறை புவனேஷ்வர் பந்தில் கடுமையான எல்.பி.முறையீட்டில் தப்பினார். தொடர்ந்து மேத்யூஸ், திரிமானே தடுப்பாட்டத்தை மீறி பந்து அவர்கள் மட்டையைக் கடந்து ஊடுருவிச் சென்ற வண்ணமே இருந்தன. திரிமானேவுக்கு உமேஷ் யாதவ் பந்து ஒன்று எட்ஜ் ஆக எளிதான கேட்ச் வாய்ப்பை தவண்ஸ்லிப்பினார்.
தேநீர் இடைவேளைக்குப் பிறகு உமேஷ் யாதவ் ரவுண்ட் விக்கெட்டில் வந்து இன்ஸ்விங்கரை வீச பந்து சற்றே நின்று எதிர்த்திசையில் லேசாக ஸ்விங் ஆனது போதுமானதாக அமைய எட்ஜை விராட் கோலி அருமையாகப் பிடித்தார். பிறகு உடனடியாகவே மேத்யூஸ் சற்றே பேலன்ஸ் தவறி அடிக்க வேண்டிய பந்தை சரியாக அடிக்காமல் ஷார்ட் கவரில் ராகுலுக்கு கேட்சிங் பயிற்சியானது.
திரிமானே, மேத்யூஸ் இருவருமே 94 பந்துகளைச் சந்தித்து இருவருமே தலா 8 பவுண்டரிகளை அடித்து முறையே 51 மற்றும் 52 ஓட்டங்களை எடுத்தனர். தினேஷ் சந்திமால் 33 பந்துகள் தடுமாறினார், தொடர்ந்து பீட்டன் ஆனார். பிறகு போதிய வெளிச்சம் இல்லாததன் காரணமாக ஆட்டம் முடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆட்ட முடிவில் சந்திமால் 13 ஓட்டங்களுடனும் டிக்வெல்லா 14 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். இன்று 45.4 ஓவர்கள் வீசப்பட்டும் ஜடேஜா வீச அழைக்கப்படவில்லை. அஷ்வின் 4 ஓவர்கள் வீசி 9 ஓட்டங்கள் என்று கட்டுப்படுத்தினார். இலங்கை 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

இன்னும் 2 நாட்களே இருப்பினும் பிட்சின் தன்மையினால் ஆட்டத்தில் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top