வடக்கு கிழக்கு இணைப்புக்கு அமைச்சர் ஹக்கீம் விருப்பம்

குறுக்காக இருக்க மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்

- சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிப்பு






ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் வடக்கு கிழக்கு இணைப்புக் குறித்து பேச்சுவார்த்தைக்கு தயார் நிலையில் இருப்பதாகவே கூறிவருகின்றார். அவர் வடக்கு கிழக்கு இணைப்புக்கு தாம் குறுக்காக இருக்க மாட்டோம் என்றும் கூறுகின்றார் என ஈ.பி.ஆர்.எல்.எப். இன் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இத்தகவலை வெளியிட்டார்.
வடக்கு கிழக்கு இணைப்புக் குறித்து முஸ்லிம் கட்சிகள் பேசத் தயாராகவுள்ள நிலையில், முஸ்லிம் கட்சிகளைக் காரணம் காட்டி அரசாங்கத்திடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுக்காமல் இருப்பது அக்கட்சிக்கு  மக்களுக்கு வழங்கிய ஆணையை புறக்கணிக்கும் ஒரு நடவடிக்கையாகும் .
வடக்கு கிழக்கை இணைக்கப் போவதில்லையென்றும், ஒற்றையாட்சியின் கீழால் தான் அரசியல் யாப்பு அமையும் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில் அதற்கு ஆதரவு வழங்கப் போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்திருப்பதை ஏற்க முடியாது.
புதிய அரசியலமைப்பு இடைக்கால அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் சமஷ்டி என்பது பேசப்படவில்லை. அதே சமயம் வடகிழக்கு இணைப்பும் பேசப்படவில்லை. அந்த அரசியலமைப்பை தமிழரசு கட்சி ஆதரித்துள்ளது. அதேபோல் புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு முன் உரிமை என்பதையும் தமிழரசு கட்சி எந்த எதிர்ப்பும் இல்லாமல் அப்படியே ஏற்று கொண்டிருக்கின்றது.
ஆனால் தமிழ்தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது வடகிழக்கு இணைப்பு அந்த வடகிழக்கு தமிழர்களின் தாயகம், சுயநிர்ணய உரிமை போன்ற கொள்கைகளுடன் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அந்த கொள்கைகளுக்கு மாறாகவே தமிழரசு கட்சி செயற்பட்டு வருகின்றது.
அதே சமயம் பௌத்த மதத்திற்கு முன் உரிமை என்பதை தமிழரசு கட்சி எந்த எதிர்ப்பும் இல்லாமல் ஆதரிக்கிறது. பௌத்ததிற்கு முன் உரிமை என்பதற்கு மக்கள் ஆணை வழங்கினார்களா? இவ்வாறான நிலையில் தமிழரசு கட்சியுடன் இனிமேல் இணைந்து செயற்படுவதில்லை என்னும் தீர்மானத்தை நாம் எடுத்திருக்கிறோம்.


மேலும் தமிழரசு கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவதும் இல்லை. அதற்காக நாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகியதாக அல்லது வெளியேறியதாகவும் இல்லை.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ஹக்கீம் வடக்கு கிழக்கு இணைப்புக் குறித்து பேச்சுவார்த்தைக்கு தயார் நிலையில் இருப்பதாகவே கூறிவருகின்றார். அவர் வடக்கு கிழக்கு இணைப்புக்கு தாம் குறுக்காக இருக்க மாட்டோம் என்றே அவர் தெரிவித்து வருவதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கருத்துத் தெரிவிக்கையில் மேலும் கூறியுள்ளார்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top