வரலாறும் சட்டமும் அறிந்திராமல்

கல்முனை நஸீர் ஹாஜி

தனது கட்டுரையில் தவறான தகவல்



கல்முனை விவகாரம்: குரங்கு அப்பம் பங்கிட்ட கதை என்ற தலையங்கத்தில் கல்முனை நஸீர் ஹாஜி அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையில்,
கல்முனை ஸாஹிறாக் கல்லூரியில் இடம்பெற்ற ஒரு சந்திப்பில் சாய்ந்தமருதைச் சேர்ந்த சகோதரர்களான வை.எம்.ஹனிபா மாஸ்டர் (மன்சூர்அமைச்சரின்.பி.ஆர்.ஓ) எம்.ஏ.கபூர் (தற்போதய சிறிகொத்தா யூ.என்.பி. கணக்காளர்) றிப்போடர் ஜுனைதீன், வாவா மாஸ்டர், மர்ஹும் கே.எம்.ஏ.ஜப்பார் தபாலதிபர் உட்பட 9 பேர்கள் இடம்பெற்றனர்.
வளம் கொழிக்கும் கல்முனைப் பட்டனத்துடன் சாய்ந்தமருது இணையத் தயாரா எனக் கேட்டபோது ஏகோபித்து ஆம் என்றனர். மருதமுனை காதர் இப்றாஹீம் சேர் நற்பிட்டிமுனை கபூர் மாஸ்டர்கல்முனையுடன் இணைந்து செயல்பட விரும்பினர்.
இதன்காரணமாக 1986ல் கரைவாகு என்ற நிர்வாகத்தில் இருந்து கரைவாகு தெற்கு (சாய்ந்தமருது) கிராம சபை, கரைவாகு மத்தி (கல்முனை) பட்டின சபை, கரைவாகு மேற்கு (நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு) கிராம சபை, கரைவாகு வடக்கு (மருதமுனை,பாண்டிருப்பு) கிராம சபை என்பன ஒன்றிணைக்கப்பட்டு கல்முனை பிரதேச சபை உருவானது என தகவல் வெளியிட்டுள்ளார்.கல்முனை நஸீர் ஹாஜி அவர்கள் எழுதிய இந்த தகவல் முற்றிலும் பிழையானதாகும்.
அன்று கல்முனையில் உள்ளூராட்சி சபைகள் நான்கு இருந்த போதிலும் இந்த நான்கு சபைகளையும் உள்ளடக்கிய ஒரு உதவி அரசாங்க அதிபர் பிரிவு (பிரதேச செயலகம்) மாத்திரம் அன்று கல்முனையில் இயங்கி வந்ததினாலும் இயலுமாணவரை ஒவ்வொரு பிரதேச செயலகமும் ஒரு சபையாக மாத்திரம் அமைக்கப்படல் வேண்டும் என்கின்ற நியதியின் அடிப்படையில்தான் இங்கிருந்த சபைகள் ஒன்றிணைக்கப்பட்டதேயன்றி கூட்டம் கூட்டி யாரிடமும் விருப்பம் கேட்டு ஒன்றிணைக்கப்பட்டதல்ல என்பதை கல்முனை நஸீர் ஹாஜி அவர்கள் புரிந்திருந்தும் அதனை புரியாதவர்போல் தவறான தகவலை இன்றைய இளைஞர்களுக்கு வழங்கியுள்ளது கவலைக்குரிய விடயமாகும்.
இது குறித்து நஸீர் ஹாஜி மருதமுனை காதர் இப்றாஹீம் சேர் நற்பிட்டிமுனை கபூர் மாஸ்டர் ஆகியோரிடம் வினவி மீண்டும் உண்மை நிலையை தெளிவு பெற்றுக் கொள்ள வேண்டும்.
கல்முனை நஸீர் ஹாஜி அவர்கள் குறிப்பிட்டிருப்பதுபோல் முன்னாள் அமைச்சர் மர்ஹும் ஏ.ஆர். மன்சூர் அவர்களின் பங்குபற்றுதலுடன் கல்முனை ஸாஹிறாக் கல்லூரியில் கூட்டம் இடம்பெற்றது என்பது உண்மை. அது பிரதேச சபையை ஒன்றிணைப்பதற்கான கூட்டமல்ல. சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச செயலகம் உருவாக்கப்படல் வேண்டும் என்று கோரிக்கைவிடுக்கப்பட்ட கூட்டமாகும்.
“சாய்ந்தமருதுக்கு மாத்திரமல்ல மருதமுனைக்கும் தனியான பிரதேச செயலகங்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளேன்” என மர்ஹும் ஏ.ஆர். மன்சூர் அவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் உரை நிகழ்த்திய ஒரு பேச்சு என்னால் தினபதிக்கு அன்று எழுதப்பட்டு பிரசுரமாகியிருந்தது. கல்முனை நஸீர் ஹாஜி அவர்கள் குறிப்பிடும் அந்தக் கூட்டத்தில் வை.எம்.ஹனிபா மாஸ்டர் (மன்சூர் அமைச்சரின்.பி.ஆர்.ஓ) என்னால் எழுதப்பட்ட அந்த பத்திரிகைச் செய்தியை கையில் எடுத்து வந்து ஆதாரம் காட்டி பேசி கோரிக்கைவிட்டது கூட்டத்தில் பங்குபற்றியவர்களுக்கு இன்றும் நினைவில் உள்ளது.
சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச செயலகம் உருவாக்கப்படல் வேண்டும் என்று வை.எம்.ஹனிபா மாஸ்டர் (மன்சூர் அமைச்சரின்.பி.ஆர்.ஓ) எம்.ஏ.கபூர் (தற்போதய யூ.என்.பி. கணக்காளர்) றிப்போடர் ஜுனைதீன், வாவா மாஸ்டர், மர்ஹும் கே.எம்.ஏ.ஜப்பார் தபாலதிபர் உட்பட 9 பேர்கள் கூடிய அந்தக் கூட்டத்தை சாய்ந்தமருது கிராமாட்சி மன்றத்தை கல்முனையுடன் ஒன்றிணைப்பதற்கு கூடிய கூட்டம் என்று கல்முனை நஸீர் ஹாஜி அவர்கள் குழம்பி தவறான தகவலை எழுதிவிட்டார். அவர் எழுதிய தவறை திருத்திக்கொள்ளவேண்டும் என எதிர்பார்க்கின்றோம்.
ஏ.எல். ஜுனைதீன்.
ஊடகவியலாளர்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top