காலியில் ஊரடங்குச்சட்டம் அமுல்

கலகமடக்கும் பொலிஸார் தயார் நிலையில்

காலி மாவட்டத்தின் சில பகுதிகளில் நேற்று இரவு ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலை காரணமாக அப்பகுதியின் சில பிரதேசங்களில் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 9 மணிவரை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காலி மாவட்டத்தின் குருந்துவத்தை, வெலிபிட்டிமோதர, மஹாலபுகல, உக்வத்த, ஜின்தோட்டை (மேற்கு மற்றும் கிழக்கு), பியதிகம ஆகிய பிரதேசங்களில் நேற்று உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த ஊரடங்கு சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

காலி மாவட்டத்தின் ஜின்தோட்டை எனும் பிரதேசத்தில் இரண்டு இனக் குழுக்களிடையே குறித்த முறுகல்நிலையேற்பட்டுள்ளதாகவும் குறிப்பாக விபத்து மற்றும் கால்பந்தாட்டப் போட்டியையடுத்து இந்ந முறுகல் நிலை வலுவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது முஸ்லிம்களுக்கு சொந்தமான வீடுகள் அடித்துடைக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்த பகுதியில் நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபர், பிரதேசத்திற்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதேவேளை, பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கு அமைய 200 க்கும் அதிகமான பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறித்த பகுதியில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கலகமடக்கும் பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டுகளுடனும் தண்ணீர் பீய்ச்சியடிக்கும் இயந்திரங்களுடனும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் 100 பேரும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக 7 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலி ஜிந்தோட்டை பகுதியில் நேற்று  மாலை (17) ஏற்பட்டிருக்கும் வன்முறைச்சம்பவங்களை உடன் முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் றிஷாட் பதியுதீன் பொலிஸ்மா அதிபருக்கு கோரிக்கைவிடுத்திருந்தார்.
வன்முறையாளர்கள் அங்கு மேற்கொண்டுவரும் அடாவடித்தனங்களால் முஸ்லிம் மக்கள் வீடுகளில் அச்சத்துடன் அடைந்து கிடப்பதாகவும் விசேட அதிரடிப்படையினரை மீண்டும் அந்தப் பிரதேசத்துக்கு அனுப்பி நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருமாறும் பொலிஸ்மா அதிபரிடம் அவர் வேண்டுகோள்விடுத்திருந்தார்.

இதே வேளை காலியில் தற்போது ஏற்பட்டிருக்கும் பதற்றமான சூழ்நிலை மற்றும் அங்கு ஏற்பட்டுள்ள அசம்பாவிதங்கள் குறித்து அமைச்சர் வஜிர அபேயவரத்தனவுடனும் தொடர்புகொண்டு அமைச்சர் றிஷாட் நிலைமைகளை விளக்கினார். முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தையும் பீதியையும் நீக்கும் வகையில் உரிய நடவடிக்கைக்கு ஆவன செய்யுமாறு அமைச்சர் றிஷாட் கேட்டுக்கொண்டார்.
அத்துடன் அமைச்சர் றிஷாட் காலி பிரதிப் பொலிஸ்மா அதிபர் அழகக்கோனுடன் தொடர்புகொண்டு விசேட அதிரடிப் படையினரை பாதுகாப்புக் கடமையில் மீண்டும் ஈடுபடுத்துமாறும் பணிப்புரைவிடுத்தார்.










0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top