காலி மோதல் தொடர்பில்

சமூக வலைத்தளங்களுக்கு

அமைச்சரின் அவசர அறிவுறுத்தல்



காலி, கிங்தொட்ட பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட அமைதியின்மை தற்போது முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், குறித்த சம்பவம் தொடர்பிலான காணொளிகள் மற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பிரசுரிக்க வேண்டாம் எனவும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.
சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவினால் இன்று விடுக்கப்பட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோதல்களின் மூலம் இரத்தம் சிந்துவதனை தவிர்த்துக் கொள்ளுமாறும் அமைச்சர் சாகல ரத்நாயக்க கேட்டுக்கொண்டுள்ளார்.
காலி, கிங்தொட்ட பகுதியில் ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடி படை மற்றும் இராணுவம் அழைக்கப்பட்டிருந்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் ஆலோசனைகளின் பிரகாரம் குறித்த பகுதிக்கு இன்று காலை 9 மணி வரை ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, காலி, கிங்தொட்ட பகுதியில் ஏற்பட்ட அமைதியின்மை குறித்த காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் ஊடாக செய்திகளை சமூக வலைத்தளங்களில் பிரசுரிக்க வேண்டாம் என அமைச்சர் சாகல ரத்நாயக்க கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த பிரச்சினையை மேலும் வலுப்படுத்தும் வகையில் செயற்படுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

காலி, கிங்தொட்ட பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் நேற்றிரவு மோதல் சம்பவமொன்று ஏற்பட்டிருந்தது.
இந்த மோதல் சம்பவத்தில் சிலர் காயமடைந்திருந்ததுடன், சில கட்டடங்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டிருந்தது.
இந்த சம்பவத்தை அடுத்து குறித்த பகுதிக்கு பாதுகாப்பு பிரிவினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டிருந்தனர்.
குறித்த பகுதியின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் நேற்றிரவு முதல் இன்று காலை 9 மணி வரை 6 கிராம சேவகர் பிரிவுகளுக்கு ஊரடங்கு சட்டமும் பிறப்பிக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இன்று காலை வரை 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் இன்றைய தினம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top