தம்பி நிசாம் காரியப்பருக்கு.!
உங்கட உம்மா.. உம்மா…!
எங்கட உம்மா என்ன சும்மாவா?
மனதை நெருடிக் கொண்டிருந்த கேள்வி


எனது தம்பி (ஒன்றுவிட்ட) நிஸாம் காரியப்பர் அவர்களிடம் ஒரு கேள்வியைக் கேட்க வேண்டுமென்று எனது மனதில் தோன்றியது. அது ஒரு சுமையாகவே எனது மனதை நெருடிக் கொண்டிருந்ததால் அதனை இங்கு இறக்கி வைப்பது எனது மனதுக்கு சுகமாக இருக்கும் என்பதால் இங்கே பதிவிடுகிறேன்.
கடந்த 11 ஆம் திகதி தாருஸ்ஸலாமில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதி உயர்பீட கூட்டத்தில் என்ன நடந்தது என்பது என்னை விட உங்களுக்குத் தெரியும்.
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் நாட்டின் பல இடங்களிலும் இடம்பெற்ற காலத்தையொட்டிய குறித்த திகதியில் (மார்ச் 11) நடைபெற்ற உங்கள் கட்சியின் உயர்பீடக் கூட்டத்தில் பிரதியமைச்சர் ஹாரிஸ் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில் நீங்களே முதன்மையாக நின்று செயற்பட்டீர்கள் என்பது ஊர் அறிந்த விடயம்.
ஆனால், அவ்வாறானதொரு தற்றுணிவு உங்களுக்கு ஏற்பட்டதனை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. ஏனெனில், நீங்கள் எனது தம்பி அல்லவா? உங்களைப் பற்றி எனக்கு என்ன தெரியாதா?
சிலவேளைகளில் நீங்கள் சொல்லிக் கொடுப்பதனை திரும்பிச் செல்லும் கிளிப்பிள்ளை போன்ற அப்பாவி குணம் கொண்டவர் என்பதும் எனக்குத் தெரியும்.

சரி இனி விடயத்துக்குச் சுருக்கமாக வருவோம்..
சிங்கள இனவாதிகளால் எமது சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட சம்பவங்களை பிரதியமைச்சர் ஹரீஸ் அவர்கள் கண்டித்து அன்றைய சட்ட ஒழுங்குகள் அமைச்சராக இருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக குரல் கொடுத்திருந்தார்.
முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெறும் சம்பவங்களுக்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் பிரதமர் மீது கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு நாம் ஆதரவாக செயற்படுவோம் என்றும் பிரதியமைச்சர் ஹரீஸ் எச்சரிகை விடுத்திருந்தார்.
இதனைக் கேட்ட நீங்களும் கட்சித் தலைமையும் முஸ்லிம் மக்கள் மீது கட்டவிழத்து விடப்பட்ட கலவரச் சூடு கூட ஆறாத கால நிலையில் அரசியல் உயர்பீடத்தை அவசர அவசரமாகக் கூட்டி பிரதியமைச்சர் ஹாரீஸுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு தீவிரமாகச் செயற்பட்டீர்கள். அதற்கும் மேலாகச் சென்று அவரைக் கட்சியிலிருந்தும் இடைநிறுத்துவது தொடர்பிலும் ஆராய்ந்தீர்கள்.
ஆனால், அது உங்களால் முடியாது போய்விட்டது. உயர்பீட உறுப்பினர்கள் மத்தியில் உங்கள் நிலைப்பாட்டுக்கு எதிராக எழுந்த பலத்த எதிர்ப்பு, பிரதியமைச்சரின் கூற்றைப் பலரும் நியாயப்படுத்தி ஆதரவளித்தமை போன்றனவற்றால் உங்கள் ஒழுக்காற்று நடவடிக்கை என்ற விடயம் தாருஸ் ஸலாமிலேயே ஒழுகிப் போய்விட்டது.
சமூகத்துக்காக குரல் கொடுத்த பிரதியமைச்சர் ஹாரிஸ் அவர்கள் ரணிலை எதிர்த்து சவால் விட்டார் என்ற ஒரேயொரு காரணத்துக்காக அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வதற்கான தீவிர முஸ்தீபில் நீங்கள் ஈடுபட்டிருந்தால் அல்லது ஈடுபடுத்தப்பட்டிருந்தால் இன்று தோன்றியுள்ள நிலைமைக்கு நீங்கள் கூறும் பதில் என்ன? எடுக்கப் போகும் நடவடிக்கைகள் எவை?

அதாவது.தே..வுடன் தொடர்ந்து பயணிப்பது கஷ்டம், எங்களை புறந்தள்ளினால் அரசியல் ரீதியாக தகுந்த பதிலடி கொடுப்போம்என கட்சித் தலைவரும் அமைச்சருமான கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்கள் கூறியுள்ளார். இந்த விடயத்தில் அமைச்சர் ஹக்கீமும் ரணிலைத்தானே சாடியுள்ளார்.
எனவே, நான் கேட்பது இதுதான்சமூகத்தின் துன்ப நிலை கண்டு பொங்கி எழுந்து ரணிலுக்கு எதிராக குரல் கொடுத்தார் என்பதற்காக, (ரணிலைத் திருப்திப்படுத்த வேண்டும் என்ற ஒரேயொரு காரணத்துக்காக) பிரதியமைச்சர் ஹாரீஸ் அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கைகளை முன்னெடுத்த நீங்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை உள்ளூராட்சி தேர்தல் என்ற விடயத்தில் ரணில் ஏமாற்றி விட்டார் என்ற ஒரேயொரு விவகாரத்துக்காக கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு (.தே.) எதிராக இப்போது வெளியிட்டுள்ள கருத்துக்கு நீங்கள் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கையை முன்னெடுத்து கட்சியிலிருந்து இடை நிறுத்த முடியாதா?
இதனை ஏன் உங்களிடம் நான் கேட்கிறேன் என்றால், நீங்கள்தானே பிரதியமைச்சர் ஹாரீஸ் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டுமென தீவிரமாகச் செயற்பட்டவர் அல்லது செயற்பட நிர்ப்பந்திக்கப்பட்டவர் என்பதால்தான்.
நான் தெரியாமல்தான் கேட்கிறேன் இது தொடர்பில் உங்கள் கருத்தென்ன தம்பி நிஸாம்! உங்களது காக்காவான சித்தீக் காரியப்பராகிய எனக்கு கொஞ்சம் விளக்க முடியாதா.?
சிலவேளைகளில் சில விடயங்களை நான் முட்டாள்தனமாக சிந்திப்பவன் என்பது உங்களுக்குத் தெரியும்தானே? அதனால்தான் உங்களிடம் இதற்கு விளக்கம் கேட்கிறேன் தம்பி.
ஏன் என்றால் நீங்களும் சிரேஷ்ட அதுவும் ஜனாதிபதி சட்டத்தரணி, குற்றமிழைத்தால் பதவி, தராதரம் பார்க்காது அனைவரும் தண்டிப்பட்ட வேண்டுமென்பது சட்டத்தின் தாரக மந்திரமல்லவா?
 நன்றி
இப்படிக்கு
உங்கள் காக்கா
.எச்.சித்தீக் காரியப்பர்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top