குழந்தையை மடியில் வைத்தபடி
பரீட்சை  எழுதிய பல்கலைக்கழக மாணவி



குழந்தையை மடியில் வைத்தபடி பரீட்சை எழுதிய பல்கலைக்கழக மாணவியின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் ஆப்கானிஸ்தானில் இடம்பெற்றுள்ளது.
ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதல்களால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடு. அங்குள்ள பெண்களிடம் படிப்பறிவு மிகவும் குறைவு. எனவே அவர்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள்.
இத்தகைய நாட்டில் குக்கிராமத்தை சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் படிப்புக்காக பல்கலைக் கழகத்தில் சேர நுழைவு பரீட்சைஎழுதினார். திருமணமான அவர் 3 குழந்தைகளின் தாய்.
அவரது பெயர் ஜகந்தாப் அகமதி. விவசாயி ஆன இவர் டாஸ்குந்தி மாகாணத்தை சேர்ந்தவர். இதில் விசேஷம் என்னவென்றால் பரீட்சை எழுதுவதற்கு பிறந்த தனது கைக்குழந்தையுடன் வந்து இருந்தார். தனது கிராமத்தில் இருந்து திலி நகருக்கு மலைப் பாதை வழியாக 2 மணி நேரம் நடந்து வந்தார். அங்கிருந்து 9 மணி நேரம் பஸ் பயணம் மூலம் காபூல் வந்து பரீட்சை எழுதினார்.
அவருக்கான பரீட்சை கட்டணத்தை ஆப்கானிஸ்தான் இளைஞர் சங்கத்தினர் உதவியுடன் செலுத்தினார். பரீட்சை எழுதி கொண்டிருந்தபோது அவரது குழந்தை கிஷ்ரன் காது வலியால் அழுதது.
உடனே கைக்குழந்தையின் அழுகையை சமாதானப்படுத்தினார். பின்னர் அதிகாரி அனுமதியுடன் குழந்தையை பரீட்சை அறைக்குள் கொண்டு வந்தவர் அதை மடியில் கட்டிக் கொண்டு தரையில் அமர்ந்தபடி பரீட்சை எழுதி முடித்தார்.
குழந்தையை மடியில் கட்டியபடி தனியார் பல்கலைக்கழகத்தில் பரீட்சை எழுதிய அகமதியின் போட்டோவை பேராசிரியர் நசீர் குஷராவ் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அது வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top