உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி
தகுதிபெற்றது ஆப்கானிஸ்தான் அணி



உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான சூப்பர் சிக்ஸ் தகுதிச்சுற்றில் அயர்லாந்து அணியை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அணி உலகக்கிண்ண போட்டிக்கு தகுதி பெற்றது.
உலகக்கிண்ண கிரிக்கெட் தகுதிச்சுற்றுக்கான இறுதி சூப்பர் சிக்ஸ் போட்டியில் அயர்லாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் சிம்பாப்வேயில் நேற்று மோதின.
இப்போட்டியில் வெற்றி பெறும் அணியே அடுத்தாண்டு நடைபெறவுள்ள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு தகுதிபெறும்.
எனவே வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்துடன் இரு அணிகளும் விளையாடின. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
அயர்லாந்து அணியின் ஆரம்ப ஆட்டக்காரர்களாக வில்லியம் போர்டெர்பீல்டும், போல் ஸ்டெர்லிங்கும் களமிறங்கினர்.
போர்டெர்பீல்ட் 20 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து இறங்கிய அண்ட்ரூ போல்பிர்னி 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிய நெய்ல் பிரையன் நிதானமாக விளையாடி 36 ஓட்டங்களை  எடுத்தார். அடுத்து வந்தவர்கள் நிலைத்து நிற்கவில்லை.
சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்த போல் ஸ்டெர்லிங் 55  ஓட்டங்களுடன் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். அயர்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 209 ஓட்டங்களைப் பெற்றது.
கெவின் பிரையன் 41 ஓட்டங்களைப் பெற்றார்.  ஆப்கானிஸ்தான் அணி சார்பில் ரஷித் கான் 3 விக்கெட்டுகளையும்  தவ்லத் சத்ரான் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 210 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது.
ஆரம்ப ஆட்டக்காரர்களாக முகம்மது ஷசாத், குல்பாதின் நயிப் ஆகியோர் களமிறங்கினர்.
இருவரும் சிறப்பாக விளையாடினர். அரைசதம் அடித்த ஷசாத் 54 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து வந்த ரஹ்மத் ஷா 12 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நயிப் 45 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 49.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 213 ஓட்டங்களைப்பெற்று ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் அஸ்கார் ஸ்டானிக்சாய் 39 ஓட்டங்களுடனும்  நஜிபுல்லா சத்ரான் 17 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். அயர்லாந்து அணி சார்பில் சிமி சிங் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் உலகக்கிண்ண தகுதிச்சுற்றின் இறுதிப்போட்டிக்கு ஆப்கானிஸ்தான் அணி முன்னேறியது.
இறுதிப்போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள்  - ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதன்மூலம் இந்த இரு அணிகளுமே உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. 

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top