பொத்துவில் பிரதேச சபையில்
ஐதேக ஆட்சியமைக்க உதவிய
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
உறுப்பினரை நீக்க முடிவு?


அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் பிரதேச சபையில் ஐதேக ஆட்சியமைக்க உதவிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினரை கட்சியில் இருந்து நீக்கவுள்ளதாக அந்தக் கட்சி வட்டாரங்களை மேற்கோள் காட்டும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பொத்துவில் பிரதேசசபையில்  ஐதேக ஆட்சியமைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 3 உறுப்பினர்களும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஒரு உறுப்பினரும் ஆதரவு அளித்திருந்தனர்.
பிரதேச சபையின் தவிசாளர் பதவியை  ஐதேகவுக்கு விட்டுக் கொடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதி தவிசாளர் பதவியை பெற்றிருந்தது.
சிங்களப் பேரினவாதக் கட்சிகளுடனும், ஈபிடிபியுடனும் இணைந்து வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைப்பதை  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கடுமையாக விமர்சித்து வருகிறது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஒருவர், ஐதேக ஆட்சியமைக்க உதவியமை கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், பொத்துவில் பிரதேச சபையில் தலைமையின் அறிவுறுத்தலை மீறி தமது உறுப்பினர் செயற்பட்டதாக நியாயப்படுத்தியுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வட்டாரங்கள், கட்சியின் கட்டுப்பாட்டை மீறிய குறித்த உறுப்பினரை கட்சியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப் போவதாக தெரிவித்துள்ளன.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top