“அப்பாவுடன் இருக்க ஆசையாய் இருக்கு. அக்கா
அப்பாவுக்குச் சொல்லுங்கோ
எங்கட அப்பாவை விடச்சொல்லி”
ஜனாதிபதியின் மகளுக்கு
அரசியல் கைதியின் மகள் உருக்கமான கடிதம்
நானும் அண்ணாவும் அப்பாவுடன் இருக்க ஆசையாய் இருக்கு. அக்கா உங்களுக்குத் தெரியும் அப்பாவின் பாசமும் அருமையும்.
நீங்கள் கருணை வைத்து உங்கட அப்பாவுக்கு கொஞ்சம் சொல்லி எங்கட அப்பாவை மன்னித்து விடச்சொல்லுங்கோ.
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரின் மகள் சங்கீதா தனது அப்பாவை மன்னித்து விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவின் மகள் சதுரிகாவுக்கு இவ்வாறு தெரிவித்து உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
கடந்த 15-03-2018 அன்று சுகயீனம் காரணமாக மரணமடைந்த தனது மனைவியின் இறுதி நிகழ்வுக்கு சிறைவிடுப்பில் வருகைதந்த ஆனந்தசுதாகர் இறுதி நிகழ்வு முடிந்து மீண்டும் சிறைச்சாலை பேரூந்தில் மகசீன் சிறைச்சாலை நோக்கி செல்வதற்கு ஏறிய போது அவரது பத்து வயது மகள் சங்கீதாவும் சிறைச்சாலை பேரூந்தில் தந்தையுடன் சேர்ந்து ஏறியமை அனைவரின் மனங்களையும் நெகிழவைத்த உருக்கமான சம்பவமாக அமைந்தது.
தாயும் தந்தையும் இல்லாத நிலையில் வாழ்ந்து வரும் இரு பிள்ளைகளான கனிரதன் மற்றும் சங்கீதாவின் நிலைமைகளை கருத்தில் கொண்டு ஆனந்தசுதாகருக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு பல மட்டங்களிலும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில்தான் நேற்று ஆனந்தசுதாகரின் மகள் சங்கீதா ஜனாதிபதியின் மகள் சதுரிகாவுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
அன்புடன் சதுரிகா அக்காவுக்கு!
அம்மாவையும் இழந்து அப்பாவையும் பிரிந்து நானும் அண்ணாவும் அநாதையாய் இருக்கின்றோம். நான் அம்மாவின் வயிற்றில் இருந்தபோதே அப்பா கைது செய்யப்பட்டார்.
எனக்கு இன்று எனக்கு பத்து வயது இதுவரைக்கும் அப்பாவுடன் பாசமாக பழகியது இல்லை. அம்மாவின் செத்தவீட்டில்தான் அப்பாவின் மடியில் இருக்க கிடைத்தது. அதுவும் கொஞ்சநேரமே.
அம்மா இல்லாத இந்த வீட்டில் நானும் அண்ணாவும் அப்பாவுடன் இருக்க ஆசையாய் இருக்கு. அக்கா உங்களுக்குத் தெரியும் அப்பாவின் பாசமும் அருமையும். நீங்கள் கருணை வைத்து உங்கட அப்பாவுக்கு கொஞ்சம் சொல்லி எங்கட அப்பாவை மன்னித்து விடச்சொல்லுங்கோ.
அக்கா நான் இப்ப கடவுளை விட உங்கட அப்பாவைதான் நம்புகிறேன் ஏனென்றால் இந்த உலகத்தில் அவரால் மட்டும்தான் எங்கட அப்பாவை விடுவிக்க முடியும். இது நடக்க நீங்களும் உங்கட அப்பாவிடம் சொல்லுங்கோ. அன்புள்ள அக்கா அம்மாவும் அப்பாவும் இல்லாத இந்த வீட்டில் எங்களுக்கு வாழவே பிடிக்கவில்லை.
அக்கா என்னை உங்கள் தங்கையாக நினைத்து எனது அப்பாவை விடுதலை செய்ய நீங்களும் உதவுங்கள்.
நன்றி
இப்படிக்கு
அன்புள்ள உங்கள் தங்கை
இவ்வாறு குறித்த கடித்த்தில் எழுதப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.