அதிக ஆசனங்களைக் கைப்பற்றிய போதும்
காலி, நீர்கொழும்பு மாநகரசபைகளின்
முதல்வர் பதவிகளை மஹிந்த கட்சியிடம்
பறிகொடுத்தது ஐக்கிய தேசியக்
கட்சி
காலி, நீர்கொழும்பு மாநகரசபைகளில் ஐக்கிய தேசியக் கட்சி அதிக ஆசனங்களைக் கைப்பற்றிய போதும், இந்த இரு மாநகரசபைகளின் முதல்வர் பதவிக்கான தேர்தல்களில் மஹிந்த ராஜபக்ஸவின் சிறிலங்கா பொதுஜன முன்னணியிடம், ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியைச் சந்தித்துள்ளது.
காலி, நீர்கொழும்பு மாநகரசபைகளின் முதல்வர்களைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்புகள் இன்று அந்தந்த சபைகளில் இடம்பெற்றன.
காலி மாநகரசபையில் ஐக்கிய தேசியக் கட்சி 14 ஆசனங்களையும், சிறிலங்கா பொதுஜன முன்னணி 13 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 3 ஆசனங்களையும் கைப்பற்றியிருந்தன. அத்துடன், ஜேவிபி- 3, ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி- 1, சுயேட்சைக்குழு- 1 என ஆசனங்களைப் பெற்றிருந்தன.
இந்த நிலையில் இன்று நடந்த காலி மாநகர சபையின் முதல்வர் பதவிக்கான தேர்தலில், சிறிலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளரான பிரியந்த சகபந்து கொடகே 20 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார்.
14 ஆசனங்களைக் கைப்பற்றியிருந்த, ஐக்கிய தேசியக் கட்சி நிறுத்திய மேயர் வேட்பாளர் ஜிலித் நிசாந்தவுக்கு 11 வாக்குகளே கிடைத்தன.
இதேபோன்று நீர்கொழும்பு மாநகரசபையிலும், சிறிலங்கா பொதுஜன முன்னணியின் முதல்வர் வேட்பாளரான தயான் லான்சாவே வெற்றி பெற்றார்.
நீர்கொழும்பு மாநகர சபையில் அதிகப்படியாக 19 ஆசனங்களை , ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றியிருந்தது. எனினும், 16 ஆசனங்களைக் கைப்பற்றியிருந்த சிறிலங்கா பொதுஜன முன்னணி நிறுத்திய முதல்வர் வேட்பாளரே வெற்றி பெற்றுள்ளார்.
சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தயான் லான்சாவுக்கு, 25 வாக்குகளும், ஐக்கிய தேசியக் கட்சி நிறுத்திய விஜித பெர்னான்டோவுக்கு 19 வாக்குகளும் கிடைத்தன.
சுயேட்சைக் குழுக்களின் ஆதரவுடன், இங்கு பொதுஜன முன்னணி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
0 comments:
Post a Comment