மட்டக்களப்பு விமான நிலையம் திறப்பு

கடுமையான சோதனைகளைச் சந்திக்காமல்
விமான நிலையத்துக்கு தனியான நுழைவாயில்



முப்பதாண்டுகளாக விமானப்படையின் கட்டுப்பாட்டில் இருந்த மட்டக்களப்பு விமான நிலையம், இன்று சிவில் விமானப் போக்குவரத்துக்காக திறந்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு விமான நிலையம் சிவில் விமானப் போக்குவரத்துக்காக இன்று திறந்து வைக்கப்பட்ட போதிலும், அதன் பெரும் பகுதி நிலம், விமானப்படையின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்த விமான நிலையத்தை திறந்து வைத்தார்.
2016ஆம் ஆண்டு, ஜூலை மாதம் சிறிலங்கா ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட, புனரமைப்புப் பணிகள் முடிவடைந்து, இன்று இந்த விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
இப்போது, அனைத்துலக சிவில் விமான சேவைக்குத் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
46 மீற்றர் அகலமும், 1066 மீற்றர் நீளமும் கொண்டதாக, ஓடுபாதை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. புதிய ஓடுபாதை விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. பயணிகள் முனையத்துக்கான புதிய கட்டடமும் அமைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு விமான நிலையத்துக்கு சேவையை நடத்த விரும்பும், உள்நாட்டு விமான சேவை நிறுவனங்களுக்கு, விமானங்கள் தரையிறங்குவது மற்றும் தரித்து நிற்பதற்கான கட்டணங்கள் மூன்று மாதங்களுக்கு அறவிடப்படமாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, 145.2  ஹெக்ரெயர் பரப்பளவில் அமைந்த மட்டக்களப்பு விமான நிலையத்தின், 75.9 ஹெக்ரெயர் காணி இன்னமும், விமானப்படை வசமே உள்ளது.
எனினும். கடுமையான சோதனைகளைச் சந்திக்காமல் பயணிகள், விமான நிலையத்துக்கு செல்லும் வகையில், தனியான நுழைவாயில் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.












0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top