நேவி சம்பத் நாட்டைவிட்டு  தப்பிச் செல்லப்

பயன்படுத்தப்பட்ட கடற்படையின் 5 இலட்சம் ரூபா நிதி



கொழும்பில் 11 இளைஞர்களைக் கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்டுள்ள கடற்படைப் புலனாய்வு அதிகாரியான நேவி சம்பத் எனப்படும், லெப். கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெற்றியாராச்சிக்கு கடற்படை நிதியில் இருந்து 5 இலட்சம் ரூபா வழங்கப்பட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் கைது செய்யப்பட்ட நேவி சம்பத் நேற்று இரண்டாவது தடவையாக கோட்டை நீதிவான் முன்னிலையில் நிறுத்தப்பட்ட போது,, ஓகஸ்ட் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று நீதிமன்றில் முன்னிலையாகிய குற்றப் புலனாய்வு அதிகாரிகள், நேவி சம்பத் போலியான ஆவணங்களைக் கொடுத்து, தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு என்பனவற்றைப் பெற்று, 2017 ஏப்ரல் மாதம் மலேசியாவுக்குச் சென்று மறைந்திருந்தார் என்று தெரிவித்தனர்.
பின்னர் இவர் கடந்த மார்ச் மாதம், நாடு திரும்பி தொம்பே பகுதியில் உள்ள தென்னந்தோட்டம் ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வந்தார்.
இலங்கை துறைமுக அதிகாரசபையிடம் வாடகைக்குப் பெற்ற இரண்டு வாகனங்களை பெற்றுக் கொள்வதற்காக கொழும்பு வந்திருந்த போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேவி சம்பத் மலேசியாவுக்குத் தப்பிச் செல்வதற்கு, கடற்படையின் உயர் அதிகாரி ஒருவர் கடற்படை நிதிக் கணக்கில் இருந்து, 5 இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளார் என்றும் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கு பற்றிய விபரங்களை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வழங்குமாறு இலங்கை வங்கிக்கு உத்தரவிட்ட நீதிவான், நேவி சம்பத் போலி அடையாள அட்டை, கடவுச்சீட்டு ஆகியவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு உதவிய எந்தவொரு அதிகாரியையும் கைது செய்யுமாறும் உத்தரவிட்டார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top