நான்கு குற்றங்களும் நிரூபணம்
ஞானசர தேரருக்கு நீதிமன்றம் வழங்கியிருக்கும்
 அதிரடித் தீர்ப்பு!



பொதுபலசேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 6 வருடங்கள் அனுபவிக்கும் 19 வருட கடூழிய சிறைத்தண்டனையை விதிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்கின் தீர்ப்பிலேயே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கமைய அவருக்கு 19 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை விதித்து அந்த தண்டணையை ஆறு ஆண்டுகளில் அனுபவிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதேநேரம், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஞானசார தேரரை உடனடியாகச் சிறைச்சாலை பொறுப்பில் எடுக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று (08) மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் பிரீதி பத்மன் சுரசேன, ஷிரான் குணதிலக்க ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.
ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட, ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு முடிவுக்கு வந்ததை அடுத்து, திறந்த நீதிமன்றத்தில் அமைதியற்ற வகையில் செயற்பட்டமை, பிரகீத் எக்னலிகொடவின் மனைவிக்கு அச்சுறுத்தல் விடுத்தமை உள்ளிட்ட நீதிமன்றத்தை  அவமதித்தாரா என்பது தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த மனுவை அப்போதைய, ஹோமாகம நீதவானும் தற்போதைய கொழும்பு பிரதான நீதவான், ரங்க திசாநாயக்க தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதற்கமைய, மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால், இதற்கு முன் மேற்கொள்ளப்பட்ட உத்தரவுக்கு அமைய, அது தொடர்பாக ஆராய்ந்த சட்ட மாஅதிபர், ஞானசார தேரருக்கு எதிரான 4 குற்றங்களின் கீழ் குறித்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

குறித்த விடயம் தொடர்பில், கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிரான 4 குற்றங்களும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகியுள்ளதாக அறிவித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், அக்குற்றங்கள் தொடர்பில். அவர் குற்றவாளி எனவும் தீர்ப்பளித்துள்ளது.




பொதுபலசேனா அமைப்பின் பொது செயலாளர்
கலகொட அத்தே ஞானசார தேரர் ஸ்ரீ ஜயவர்தனபுர
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த காட்சி .......


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top