அதிகூடியளவில் வாக்களித்த கல்முனையை
ஜனாதிபதி, பிரதமர்  எட்டியும் பார்க்காதிருப்பது ஏன்?



2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அதிகூடிய வீதத்தில் வாக்களித்து மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியில் பாரிய பங்களிப்பு செய்துள்ள கல்முனைத் தொகுதிக்கு இன்னும் அவர் ஒரு தடவையேனும் விஜயம் செய்யாதிருப்பது குறித்து இப்பகுதி மக்கள் மிகுந்த கவலையடைந்துள்ளனர் என முன்னாள் கல்முனை பிரதேச சபை உறுப்பினர் .அப்துல் கபூர் தெரிவித்துள்ளார்.
இவ்விடயமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுக்கு அவர் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி நடைபெற்று முடிந்த இலங்கையின் 7 வது ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளின் படி இலங்கையிலுள்ள தேர்தல் தொகுதிகளுள் கல்முனைத் தொகுதி இரண்டு சாதனைகளைப் படைத்திருந்தது.
ஜனாதிபதி மைத்திரபால சிரிசேன அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற வாக்குகளில் தொகுதிரீதியாக கல்முனைத் தொகுதியிலேயே அதி கூடிய வாக்கு வீதமான 89.81% பதிவாகியிருந்தது.
அதேவேளை,  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் அவர்களுக்கு இலங்கையிலுள்ள தொகுதிகளுள் அளிக்கப்பட்ட வாக்கு வீதத்தில், ஆகக்குறைந்த வாக்கு வீதமான 9.26% மும் கல்முனைத் தொகுதியிலேயே பதிவாகியிருந்தது.
இலங்கையிலுள்ள தேர்தல் தொகுதிகளிலேயே அதிகூடிய வீதத்தில் உங்களுக்கு வாக்களித்த ஓர் இடமாக கல்முனைத் தொகுதி திகழ்கிறது. இது ஜனாதிபதி தேர்தல்கள் வரலாற்றில் முக்கிய பதிவாக இடம்பிடித்துள்ளது. கல்முனை அரசியல் வரலாற்றிலும் மறக்க முடியாத ஒரு நிகழ்வாகும். தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டபோது ஊடகங்களில் இவ்விடயத்திற்கு பெரும் முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது.
தேர்தலின்போது வாக்கு கேட்டு இங்கு வருகை தந்த உங்களினால் வெற்றியின் பின்னர் ஒரு தடவையாவது எட்டிப்பார்க்க முடியவில்லை. அரசியல் கட்சிகளுக்கும் கொள்கைகளுக்கும் அப்பால் உங்கள் மீது அபரிதமான நம்பிக்கை வைத்து அணிதிரண்டு வாக்களித்த கல்முனைத் தொகுதி மக்கள் மீது கரிசனை கொண்டு, கல்முனைக்கு விஜயம் செய்து இப்பகுதி வாழ் தமிழ், முஸ்லிம் மக்களை சந்தித்து, அவர்களது குறை, நிறைகளை கேட்பதற்கும் ஏதாவது ஒரு அபிவிருத்தி திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்கும் இங்கு வருவீர்கள் என்ற மக்களின் ஆதங்கம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
முன்னாள் அமைச்சர் மர்ஹும் .ஆர்.மன்சூரினால் முன்னெடுக்கப்பட்ட மட்டக்களப்பு- கல்முனை- பொத்துவில் புகையிரத சேவை விஸ்தரிப்பு முயற்சி இந்த நல்லாட்சியிலாவது நிறைவேறலாம் என்கிற எதிர்பார்ப்பும் இன்னும் கானல் நீராகவே இருக்கிறது.
இதுவரை மட்டக்களப்புக்கு 18 தடவைகள் வருகை தந்து அம்மாவட்டத்தின் அபிவிருத்தி வேலைகளையும முன்னேற்றங்களையும நேரடியாக கண்காணித்து வருகின்ற நீங்கள் ஒரு தடவையாவது அருகிலுள்ள கல்முனைக்கு வருகை தந்து, என்னவென்று கேட்காதிருப்பது மிகக் கவலைக்குரிய விடயமே.
தாங்கள் ஜனாதிபதி பதவியேற்று மூன்றரை வருடங்கள் கடந்துள்ள நிலையில் கல்முனை மக்களின் மனங்களை திருப்திப்படுத்தாததையிட்டு இம்மக்கள் ஆழ்ந்த கவலையும் வேதனையும் அடைந்திருப்பதைக் கவனத்தில் கொண்டு, இங்கு ஒரு தடவை விஜயம் செய்வதற்கு முயற்சிக்குமாறு வேண்டுகிறேன்என்று அப்துல் கபூர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top