மக்கள் சக்தி என்னும் தொனிப் பொருளில்
பாரிய பேரணியும், கூட்டமும்
கொழும்பில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்
பிரதான பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை எதிர்வரும் 6ஆம் திகதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அரசாங்கம் தனது பலத்தை நிரூபிக்கும் நோக்கில் 5ஆம் திகதி அதாவது தீபாளிக்கு முதல் நாளில் பேரணியொன்றையும், கூட்டமொன்றையும் கொழும்பில் நடத்த முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கும் ஆதரவு தெரிவிக்கும் நோக்கில் இந்தக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.
மக்கள் சக்தி என்னும் தொனிப் பொருளில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டம் கடந்த காலங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அராசங்கத்திற்கு எதிராக தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினால் ஒழுங்கு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வந்த போராட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான ஓர் பின்னணியில் எதிர்வரும் 5ஆம் திகதி நாட்டின் அனைத்து தேர்தல் தொகுதிகளிலிருந்தும் மக்களை அழைத்து வந்து பாரியளவில் கூட்டமொன்றை நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தலைமையிலான கட்சிகள் தீர்மானித்துள்ளன.
பெரும் எண்ணிக்கையிலான மக்களை கொழும்பிற்கு அழைத்து இந்தக் கூட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் நேற்றைய தினம் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
பண்டிகை தினத்திற்கு முதல் நாள் மக்கள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கும், போக்குவரத்தில் ஈடுபடுவதற்கும் இந்தப் போராட்டம் இடையூறாக அமையக்கூடிய சாத்தியங்கள் உண்டு என்பது கவனிக்கப்பட வேண்டியது
0 comments:
Post a Comment