கொழும்பு அரசியலில் மீண்டும் பரபரப்பு!
மஹிந்த பக்கம் தாவும் முஸ்லிம் எம்.பிகள்?


ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் றிசார்ட் பதியூதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் கட்சி தாவ தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.

தமது கட்சிகளின் எந்த நாடாளுமன்ற உறுப்பினரும் புதிய பிரதமரின் நியமனத்தை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் பணத்திற்கு விலை போக தயாரில்லை எனவும் தொடர்ந்தும் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இருப்பதாகவும் றிசார்ட் பதியூதீன் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர் நேற்று தெரிவித்திருந்தனர்.

எவ்வாறாயினும் மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 35 கோடி ரூபாய் வழங்கப்படும் என பேரம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 7 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 5 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.

அதேவேளை மஹிந்த தரப்புடன் நேற்று இணைந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரனை மஹிந்த தரப்புடன் இணைக்க தரகு பணியை செய்தது முன்னாள் பிரதியமைச்சர் கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் எனக் கூறப்படுகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருக்கு 35 முதல் 50 கோடி ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டதாகவும் லண்டன் ஊடாக இந்த பணம் நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பணத்தில் முதல் கட்டமாக 5 கோடி ரூபாய் வழங்கப்படுவதாகவும் மீதி தொகை நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பில் மஹிந்த தரப்புக்கு ஆதரவாக வாக்களித்த பின்னர் தவணைகளாக வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top