அபாய கட்டத்தை நோக்கி நகரும் இலங்கை அரசியல்!
ரணில் - பசில் ரகசிய சந்திப்பு

மஹிந்தவுக்கு ஆதரவு வழங்கும் உறுப்பினர்களின்
எண்ணிக்கை 97ஆக உள்ளமை 
தொடர்பிலும் கலந்துரையாடல்


கடந்த இரு வாரங்களாக இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் பதற்ற நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், நாடு பாரிய ஆபத்தை நோக்கி நகர்வதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த நிலையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ ஆகியோர் இரகசிய சந்திப்பு ஒன்றில் ஈடுபட்டதாக ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

நேற்றிரவு உயர் மட்ட வர்த்தகரினால் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக உள்ளக அரசியல் தகவல் வட்டாரங்களின் அடிப்படையில் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 26ஆம் திகதி ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் பின்னர் நாட்டின் அரசியல் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளமையினால் அதனை தீர்க்கும் வகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை புதிய பிரதமராக நியமிப்பதற்கு ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானம் காரணமாக, அரசியல் ரீதியில் அவர் பிரபலமற்ற நிலைமைக்கு உள்ளாகியுள்ளமை தொடர்பில் பசில் மற்றும் ரணில் கலந்துரையாடியுள்ளனர்.

இதுவரையில் மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவு வழங்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 97ஆக உள்ளமை தொடர்பில் கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனினும் இந்த அரசியல் நெருக்கடியை தீர்க்கும் நோக்கில் ரணில் மற்றும் பசிலுக்கு இடையில் இடம்பெற்ற இரகசிய கலந்துரையாடல் நல்ல முறையில் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இந்த சந்திப்பு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தகவல் தெரியாதென அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top