நாடாளுமன்றைக் கலைக்க
ஜனாதிபதி முடிவு எடுத்தது ஏன்?
மஹிந்த ராஜபக்ஸவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிப்பதற்கு, 113 ஆசனங்களைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையிலேயே நாடாளுமன்றத்தைக் கலைக்கும் முடிவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்தார் என்று அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் தான் நியமித்த புதிய அரசாங்கத்தைக் காப்பாற்றுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடும் முயற்சிகளை மேற்கொண்டார்.
தமிழ் முற்போக்கு கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஜனாதிபதியின் கோரிக்கைக்கு இணங்க மறுத்து விட்டன.
அத்துடன், ஐதேகவில் இருந்து மேலதிக உறுப்பினர்களைப் பிடுங்கியெடுக்கும் முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.
இந்தநிலையில், மஹிந்த ராஜபக்ஸ நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்படும் நிலை உருவானது.
இதனால் ஜனாதிபதி வேறுவழியின்றி, நாடாளுமன்றத்தைக் கலைக்கும் முடிவுக்குச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, நேற்று மாலை ஊடகங்களிடம் தகவல் வெளியிட்ட அரசாங்க பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல, மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்துக்கு போதிய பெரும்பான்மை இல்லை என்று ஒப்புக் கொண்டிருந்தார்.
104 அல்லது 105 உறுப்பினர்களின் ஆதரவே தமது அரசாங்கத்துக்கு இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment