சிறைவாசத்துக்கு பின் சவூதி இளவரசர்
காலித் பின் தலால் விடுதலை
ஏறத்தாழ ஓராண்டு சிறைவாசத்துக்கு பின் சவூதி இளவரசர் காலித் பின் தலால் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
சவூதி அரேபியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம், மன்னர் சல்மான் ஊழலை தடுப்பதற்காக பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான் தலைமையில் சிறப்பு குழு ஒன்றை அமைத்தார். அந்தக் குழுவுக்கு ஊழல் தடுப்பு வழக்குகளில் விசாரணை நடத்தவும், கைது வாரண்டுகள் பிறப்பிக்கவும், பயண தடை விதிக்கவும், நிதி பரிமாற்றங்களை தடுக்கவும், வங்கி கணக்குகளை முடக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்த குழு உடனடியாக அங்கு பல இளவரசர்களை கைது செய்து சிறையில் அடைத்தது.
அப்படி சிறையில் அடைக்கப்பட்ட இளவரசர்களில் ஒருவர், காலித் பின் தலால். இவர் மன்னர் சல்மானின் நெருங்கிய உறவினர் ஆவார். இவர் சிறையில் அடைக்கப்பட்டு ஏறத்தாழ ஓராண்டு ஆன நிலையில் இப்போது விடுதலை செய்யப்பட்டு விட்டார். இவரது சகோதரர் அல்வாலீத் பின் தலாலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் ஒருவர்.
பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி படுகொலையால், சவூதி பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மானுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அரச குடும்பத்தின் ஆதரவினை முழுமையாகப் பெறுகிற விதத்தில்தான் இப்போது இளவரசர் காலித் பின் தலால் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
விடுதலை செய்யப்பட்டுள்ள இளவரசர் காலித் பின் தலால் குடும்பத்தினருடன் காணப்படுகிற படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன.
அவர் கைது செய்யப்பட்டபோதும், இப்போது விடுதலை செய்யப்பட்டுள்ளபோதும் அதற்கான காரணத்தை சவூதி அரசு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment