உலக சாதனை படைத்த இலங்கை நாடாளுமன்றம்
இன்றைய தினம் பத்து நிமிடங்கள் இடம்பெற்ற
நாடாளுமன்ற அமர்வுக்கு 
பல கோடிகள் செலவு எனவும் தெரிவிப்பு 



இலங்கையின் நாடாளுமன்ற அமர்வுகளில் இடம்பெற்று வந்த குழப்ப நிலை நாட்டு மக்களிடம் மட்டுமல்லாது, சர்வதேச நாடுகளின் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் கடந்த 16ஆம் திகதி நாடாளுமன்றில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தால் பெரும்பாலான பொருட்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் நாளொன்றுக்கான செலவு தொடர்பில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி நாடாளுமன்றத்தின் நாளொன்றுக்கான செலவு சுமார் இரண்டு கோடியே ஐம்பது இலட்சம் ரூபா என தகவல் அறியும் சட்டமூலத்திலிருந்து தெரியவருவதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை கடந்த ஆண்டில் 95 நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அமர்வுகளுக்காக மொத்தம் 245 கோடி ரூபா வரையில் செலவாகியுள்ளமை தெரியவருகிறது.

மேலும் இறுதியாக நடைபெற்ற 3 நாடாளுமன்ற அமர்வுகளும் குழப்பகரமானதாகவே இருந்து வந்த நிலையில் இவற்றுக்கு மாத்திரம் 8 கோடி வரையில் செலவிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் இன்றைய தினம் பத்து நிமிடங்கள் தான் நாடாளுமன்றம் நடைபெற்றுள்ளது. எனினும் ஒரு அமர்விற்கான செலவு பல கோடிகள் என கூறுப்படுகிறது.

எனவே இன்றைய தினம் சில நிமிடங்கள் நாடாளுமன்ற அமர்வு இடம்பெற்றதால் அர்த்தம் இருக்கிறதா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜ் பதிலளிக்கையில்,

இன்றைய நிமிடம் சில நிமிடங்களே நாடாளுமன்றம் கூடிய போதிலும் கூட நாடாளுமன்றத்தை வழமையான நிலைக்கு கொண்டு வரக்கூடிய செயற்பாடாக இதனை கருத முடியும்.

கடந்த மூன்று நாட்களாக நாடாளுமன்றம் கூடிய போதும் கூட அதாவது சபை அமர்வுகள் ஒத்தி வைக்கப்பட்ட பின் நாடாளுமன்றம் கூடும் போது நாடாளுமன்றத்தில் நிலையாக இருக்கக்கூடிய குழுக்கள் என்பன இல்லாமல் செய்யப்பட்டுள்ளன.

எனவே அந்த குழுக்களை மீளவும் உருவாக்கும் நோக்கில் தான் நிச்சயமாக நாடாளுமன்றம் கூடியது. அதனை கூடுவதற்கான ஏற்பாடுகளை தான் சபாநாயகர் அறிவித்தார்.

மேலும் எதிர்வரும் 29ஆம் திகதி கூட்டப்படும் நாடாளுமன்றத்தில் அனைத்து செயற்பாடுகளும் வழமைக்கு திரும்புவதுடன், நிலையான அரசாங்கம் எது என்பதும் தீர்மானிக்கப்படும் என தெரிவித்தார்.

எனினும் சில நிமிடங்கள் நடத்தப்பட்ட நாடாளுமன்ற அமர்விற்காக பல கோடிகள் செலவிடப்பட்டுள்ள நிலையில் இலங்கை நாடாளுமன்றம் உலக சாதனை படைத்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top