புலனாய்வுப் பிரிவின் ஊதியப் பட்டியலில் இருந்த
தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்கள்
அமைச்சர் ராஜித சேனாரத்ன குற்றம்சாட்டு



இலங்கையில் தற்போது தடை செய்யப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் 26 உறுப்பினர்களுக்கு இலங்கை புலனாய்வுப் பிரிவு ஊதியம் வழங்கி வந்துள்ளது என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன குற்றம்சாட்டியுள்ளார்.

அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையில்,

தேசிய தவ்ஹீத் ஜமாத் மற்றும் அதன் தாக்குதல் திட்டங்கள் தொடர்பாக முன்னதாக வழங்கப்பட்ட எச்சரிக்கைகளை பாதுகாப்பு பிரிவுகள் புறக்கணித்திருந்தன.

மட்டக்களப்பு- வவுணதீவு சோதனைச் சாவடியில் 2018 நொவம்பர் 30ஆம் திகதி  இரண்டு பொலிஸார் கொலை செய்யப்பட்ட தாக்குதலை குறைந்தது 4 இராணுவ அதிகாரிகள் வழிநடத்தியுள்ளனர்.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களை அடுத்து, சாய்ந்தமருதில் தற்கொலை செய்துகொண்ட பயங்கரவாதிகளிடமிருந்து கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கி,  வவுணதீவுத் தாக்குதலின் பின்னர் எடுத்துச் செல்லப்பட்டதாகும்.

தற்போது தடை செய்யப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் குறைந்தது 26 உறுப்பினர்கள் புலனாய்வுப் பிரிவின் ஊதியப் பட்டியலில் இருந்துள்ளனர். இவர்கள் கோத்தாபய ராஜபக்சவுடன் தொடர்பில் இருந்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள அப்துல் ராசிக் என்ற தேசிய தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர் புலனாய்வுப் பிரிவிடம் ஊதியம் பெறுபவர்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தார் என்று இராணுவத்தின் முன்னாள் அதிகாரியான ஆமி மொஹிதீன் எனப்படும், பத்ருதீன் மொகமட் மொகிதீனை பொலிஸார் தேடி வருவதும் குறிப்பிடத்தக்கது.
குண்டுகளைத் தயாரிப்பதற்கு இந்த இராணுவச் சிப்பாய் உதவியதாக தற்போது கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் தகவல் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top