தற்கொலை குண்டுதாரிகளுக்கு
வெள்ளை நிற ஆடைகளை
கொள்வனவு செய்ய உதவிய மூவர் கைது

தற்கொலை குண்டுதாரிகளுக்கு கல்முனையில் கடையொன்றில் வெள்ளை நிற ஆடைகளை கொள்வனவு செய்ய உதவிய மூவர் மட்டக்களப்பில் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து, குறித்த சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஆடை வாங்க செல்வதற்காக பயன்படுத்திய வானும் கைப்பற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
கல்லடி பிரதேசத்தில் வைத்து இது கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காத்தான்குடி 4ஆம் பிரிவு 3ஆம் பழைய வீதியைச் சேர்ந்த 34 வயதுடைய அப்துல் ஹமீட் மொஹோமட் றிபாஸ் என்பவரையும் (வானை செலுத்தி சென்ற வான் சாரதி) மேலும், இவ்வாறு வானை வாடகைக்கு கொடுத்த கல்லடி மற்றும் கூளாவடி பிரதேசத்தைச் சேர்ந்த இருவரையும் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

இந்த வானில் தற்கொலை குண்டுதாரிகளான 3 பேரையும் குழந்தைகளையும் ஏற்றிச் சென்று கல்முனை பிரதேசத்தில் உள்ள கடை ஒன்றில் வெள்ளை நிற ஆடைகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

வான் சாரதியான றிபாசிடம் தற்கொலை குண்டுதாரிகள் வான் ஒன்றை வாடகைக்கு எடுத்து வரும்படி தெரிவித்ததனையடுத்து, றிபாஸ் மட்டக்களப்பு கூளாவடி பிரதேசத்தைச் சேர்ந்த யூட் என்ற வான் சாரதியிடம் வான் ஒன்று வாடகைக்கு தேவைப்படுவதாக கூறியுள்ளார்.

அதனை தொடர்ந்து யூட் கல்லடி பிரதேசத்தைச் சேர்ந்த எம்.தனுஷன் என்பவரிடம் வான் ஒன்று தேவை என குறிப்பிட்டுள்ளார். தனுஷன், சோபனா என்பவரின் வானை வாடகைக்கு எடுத்து யூட்டிடம் வழங்கியுள்ளார் என ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இதனையடுத்தே குறித்த மூவரும் கைது செய்யப்பட்டு கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top