கிழக்கு மாகாணத்தில் நான்கு இடங்களில்
பாதுகாப்பாக இருந்த பயங்கரவாத குழுவினர்





சாய்ந்தமருது பொலிவேரியன் சுனாமி வீட்டுத் திட்ட வீடொன்றில் நேற்று முன்தினம் இடம்பெற்ற சம்பவத்தில் உயிரிழந்தவர்களை அடையாளம் காண மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், சம்பவத்தில் உயிரிழந்த 15 பேரின் மரண விசாரணைகள் நீதவான் முன்னிலையில் நேற்று இடம்பெற்றதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நாட்டில் பல பகுதிகளில் தீவிர சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் நான்கு வீடுகளில் பயங்கரவாத குழுவினர் பாதுகாப்பாக தங்கியிருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அட்டாளைச்சேனை, சாய்ந்தமருது, நிந்தவூர், சம்மாந்துறை ஆகிய பகுதிகளிலுள்ள வீடுகளிலேயே இவர்கள் தங்கியிருந்துள்ளனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.

சாய்ந்தமருது பொலிவேரியன் சுனாமி வீட்டுத் திட்ட வீடொன்றில்  நேற்று முன் தினம் ஏற்பட்ட மோதல் சம்பவம் காரணமாக 15 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு நேற்று அறிவித்திருந்தது.

பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து நேற்று முன்தினம் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது பாரிய மோதல் நிலை ஏற்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தில் பயங்கரவாதிகளுக்கும் இலங்கை பாதுகாப்பு படையினருக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கி பிரயோகம் ஏற்பட்டது.

அதிரடி படையினரின் தாக்குதல்களுக்கு முகங்கொடுக்க முடியாத பயங்கரவாதிகள் தற்கொலை தாக்குதல் மேற்கொண்டனர்.

இதன்போது சாய்ந்தமருந்து பகுதியில் மொத்தமாக 15 சடலங்கள் மீட்கப்பட்டிருந்தன. இதன்போது உயிரிழந்தவர்களில் 6 ஆண்களும், 3 பெண்களும், 6 சிறுவர்களும் அடங்குகின்றனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top