கோத்தபாய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை இரத்து?
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது உறுதி


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தாம் களமிறங்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ரொய்ட்டர் செய்திச்சேவைக்கு வழங்கியுள்ள விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

நான் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றால், உடனடியாக, இஸ்லாமிய அடிப்படைவாத அச்சுறுத்தலை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும். பாதுகாப்பு கட்டமைப்பு மீளமைக்கப்படும்.

புலனாய்வு சேவைகளை கட்டியெழுப்புவதன் மூலமும், பொதுமக்களைக் கண்காணிப்பதன் மூலமும், இஸ்லாமிய அடிப்படைவாதம் பரவுவதை தடுக்க முடியும்.

2011ஆம் ஆண்டு 5000 பேரைக் கொண்ட இராணுவப் புலனாய்வுப் பிரிவு கட்டியெழுப்பப்பட்டது. அவர்களில் சிலர் அரபி மொழி பேசக் கூடியவர்கள். அவர்கள் தற்போதைய அரசாங்கத்தினால் கலைக்கப்பட்டனர்.

புலனாய்வு வலையமைப்புகளை கலைக்காமல் இருந்திருந்தால் இந்த அரசாங்கத்தினால் இந்த தாக்குதல்களைத் தடுத்திருக்க முடியும். போரின் போதும் போருக்குப் பின்னரும், விரிவான கண்காணிப்பு திறனை நான் கட்டியெழுப்பியிருந்தேன்.

தேசிய பாதுகாப்புக்கு அரசாங்கம் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அவர்கள், நல்லிணக்கம், மனித உரிமைகள், தனிநபர் சுதந்திரம் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கு அரசாங்கமே முழுப் பொறுப்பு. எப்படி நடந்தது, யார் பின்னணி, என்ற தெளிவான தகவல்களை அரசாங்கத்தினால் வழங்க முடியவில்லை. பலரும் பலரையும் விமர்சிக்கின்றனர். என்ன நடந்தது என்ற சரியான தகவல்களைக் கொடுக்கவில்லை.

எந்த அமைப்பு இதனைச் செய்தது, அவர்கள் இந்தளவுக்கு எப்படி வந்தார்கள், என்ற விபரங்களை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அவர்கள் கொடுக்கவில்லை.” என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, தனது அமெரிக்கா குடியுரிமையை இரத்து செய்யுமாறு கடந்த மார்ச் 6ஆம் திகதி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அமெரிக்கத் தூதரகத்திற்கு விடுத்த வேண்டுகோளை, அந்நாட்டு அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய அவரின் அமெரிக்கா குடியுரிமை இரத்து செய்யப்பட்டமையே உறுதி செய்யும் கடிதம், இலங்கையின் அமெரிக்க தூதரகத்தினால் அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top