முன்னாள் பாதுகாப்புச் செயலாளரை
கைது செய்ய திட்டம்
கொழும்பு ஊடகம்,  தகவல்


ஈஸ்டர் ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களை தடுக்க தவறினார் என்ற குற்றச்சாட்டில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னான்டோ விரைவில் கைது செய்யப்படவுள்ளார் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கொழும்பு ரெலிகிராப் ஊடகம், இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

ஹேமசிறி பெர்னான்டோவுக்கு எதிராக ஜனாதிபதி சிறிசேனவின் ஆதரவாளரான நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஸ ஆறு வெவ்வேறு பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளைச் செய்துள்ளார்.

பொலிஸ் தலைமையகம், கோட்டை, கொள்ளுப்பிட்டி, கொட்டாஞ்சேனை, கட்டான, மட்டக்களப்பு ஆகிய பொலிஸ் நிலையங்களிலேயே இந்த முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முன்னதாக பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னான்டோவையும், பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவையும் கைது செய்ய வேண்டும் என்றும் விஜேதாச ராஜபக்ஸ கோரியிருந்தார்.

இந்த நிலையில் பாதுகாப்பு அமைச்சில் நேற்று நடந்த கூட்டத்தில், ஹேமசிறி பெர்னான்டோ கைது செய்யப்படவுள்ளார் என்று ஜனாதிபதி சூசகமான தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் புதிய பாதுகாப்புச் செயலாலர் ஜெனரல் சாந்த கொட்டேகொடவை அவர் அறிமுகம் செய்து வைத்திருந்தார்.

பாதுகாப்பு அதிகாரிகளுடன் நடந்த 40 நிமிட கலந்துரையாடலிலேயே ஹேமசிறி பெர்னான்டோவின் கைது தொடர்பாகவும் பேசப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல்களுக்கு முன்னதாக, இதுகுறித்து ஜனாதிபதியை , அரச புலனாய்வுச் சேவையின் தலைவர் நிலந்த ஜயவர்த்தன தனியாகச் சந்தித்து விளக்கமளித்தது குறித்து, ஹேமசிறி பெர்னான்டோ விரிவாக அறிந்திருந்தார்.

சிங்கப்பூரில் இருந்தபோது, ஜனாதிபதி சிறிசேனவுக்கு தொலைபேசி ஊடாகவும் அவர் தெரியப்படுத்தியிருந்தார்.

தற்போது இந்த தகவல் கசியும் என்ற பயத்தில், ஹேமசிறி பெர்னான்டோவை மௌனமாக்குவதற்காக அவரைக் கைது செய்வதற்கான நகர்வு முன்னெடுக்கப்படுகிறது என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top