நல்லாட்சிக்கு
ஏற்பட்டிருக்கும் கருப்பு புள்ளிகள்
நாட்டில் நல்லாட்சி ஏற்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் நாட்டு மக்கள் அதிகமாக வாக்களித்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு அதிகாரத்தை வழங்கியிருக்கும்
நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவமும் அந்தக் கட்சியின் பங்காளிக் கட்சியான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவமும் தேசியப்
பட்டியல் நியமன விடயத்தில் சிபார்சு செய்துள்ள இரண்டு உறுப்பினர்கள் குறித்து மக்கள்
மத்தியில் அதிருப்தி தோன்றியுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் தேசியப் பட்டியலில் நியமிக்கப்பட்டுள்ள
அனோமா கமகே மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக நியமிக்கப்பட்டுள்ள ஏ.ஆர்.ஏ. ஹாபிஸ் ஆகியோர்களின் நியமனங்களே இவ்வாறு விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.
திகாமடுல்ல மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில்
போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கும் தயா கமகே அவர்களின் மனைவிதான் அனோமா கமகே என்பவராகும். கணவன் நாடாளுமன்றம் தெரிவு செய்யப்பட்டிருக்கும்
நிலையில் அவரின் மனைவிக்கு தேசியப் பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினர் நியமனம் வழங்கியிருப்பது நல்லாட்சிக்கு
கரும்புள்ளியாக அமைந்துள்ளதாக நல்லாட்சிக்கு உதவிய மக்களால் விமர்சனம் செய்யப்படுகின்றது.
இதுபோன்று நல்லாட்சி செய்யப் போகும் ஐக்கிய தேசியக் கட்சியில்
கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கும் பங்காளிக் கட்சியான சிறிலங்கா
முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் சகோதரர்தான் ஏ.ஆர்.ஏ. ஹாபிஸ் என்பவராகும். தேசியப் பட்டியலில் இவருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நியமனம் வழங்கியிருப்பது நல்லாட்சிக்கு
மற்றொரு கரும்புள்ளியாக அமைந்துள்ளதாக நல்லாட்சிக்கு உதவிய மக்களால் விமர்சனம் செய்யப்படுகின்றது.
ஏ.ஆர்.ஏ. ஹாபிஸ் அவர்களின் நியமனம் நம்பிக்கைக்கு அவர் உரியவர்
என்ற அடிப்படையிலேயே செய்யப்பட்டிருக்கிறது. பின்னர் வேறு ஒரு நபர் அவர் இராஜிணாமாச்
செய்யவைக்கப்பட்டு நியமிக்கப்படுவார் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின்
தலைமைத்துவத்தால் விளக்கம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அப்படியாயின் பட்டியலில் பெயரிடப்பட்டுள்ள கட்சியின் செயலாளர்
எம்.ரி.ஹஸனலி மற்றும் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் ஆகியோர் கட்சியின் தலைமைத்துவத்திற்கு
விசுவாசம் இல்லாதவர்களா? நம்பமுடியாதவர்களா? என்ற சந்தேகங்கள் தோன்றியுள்ளதுடன் மக்கள்
மத்தியில் விமர்சனங்களும் செய்யப்பட்டு வருகின்றன.
எது எப்படியிருந்த போதிலும் ஐக்கிய தேசியக் கட்சின் சார்பாக
தேசியப் பட்டியலில் நியமிக்கப்பட்டுள்ள இந்த இரு நியமனங்களும் நல்லாட்சிக்கு கரும்புள்ளியாகவே
அமைந்திருப்பதாக மக்களால் விமர்சனம் செய்யப்படுகின்றது
0 comments:
Post a Comment