75 மீட்டர் நீளம், 11 மீட்டர் அகலம் கொண்ட
"சாகரா' ("வராஹா') ரோந்துக் கப்பல்
இந்தியா இலவசமாக இலங்கைக்கு வழங்கியது

இலங்கைக் கடற்படைக்கு குத்தகை அடிப்படையில் சேவையாற்றி வந்த இந்தியக் கடலோரக் காவல்படைக்குச் சொந்தமான "வராஹா' ரோந்துக் கப்பல், இலங்கைக்கே முழுமையாக வழங்கப்பட்டுள்ளது. இதையொட்டி, கொழும்பு துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்வில், "வராஹா' கப்பல் முறைப்படி இலங்கைக்கு கையளிக்கப்பட்டது.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடல்சார் குற்றங்களைத் தடுக்கும் நடவடிக்கையில் இலங்கை காட்டி வரும் ஈடுபாட்டைப் போற்றும் வகையில், இந்த ரோந்துக் கப்பல் இலங்கைக்கு இலவசமாக  கையளிக்கப்பட்டுள்ளதாக இந்திய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் 1992-ஆம் ஆண்டில் கடலோரக் காவல் படைக் கண்காணிப்புப் பணிக்காக இந்த ரோந்துக் கப்பல் தயாரிக்கப்பட்டது. 75 மீட்டர் நீளம், 11 மீட்டர் அகலம் கொண்ட இந்தக் கப்பல் தொடக்கத்தில் இந்தியக் கடல் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டது. 2006-ஆம் ஆண்டில் இலங்கை அரசின் வேண்டுகோளுக்கிணங்க இந்தக் கப்பல் இலங்கைக் கடற்படையின் சேவைக்காக குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, இந்தக் கப்பலுக்கு "சாகரா' என இலங்கைக் கடற்படை பெயர் சூட்டியது. இலங்கை உள்நாட்டுப் போரின் போதும், தற்போது வரையிலும் அந்த நாட்டுக் கடல்சார் கண்காணிப்பு, எல்லை தாண்டிய பயங்கரவாதத் தடுப்பு ஆகிய நடவடிக்கைகளில் இந்தக் கப்பல் இலங்கை கடற்படைக்கு பேருதவியாக இருந்தது.
இந்த நிலையில், குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்ட இந்த ரோந்துக் கப்பலை இலங்கை நாட்டுக்கே இலவசமாக வழங்க மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசு முடிவு செய்தது. இதையடுத்து, "வராஹா' என பெயர் சூட்டப்பட்டு முறைப்படி இலங்கைக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு இலவசமாக இந்தியா அளித்துள்ள ரோந்துக் கப்பலின் செயல்பாடு பற்றிய தகவல் முன்கூட்டியே வெளியே தெரிந்தால், அது இலங்கைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் தமிழகக் கட்சிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தும் என மத்திய அரசு கருதியதாகத் தெரிகிறது. அதனால், இந்த விவரம் கடைசி வரை இரகசியமாகவே டில்லியில் வைக்கப்பட்டிருந்ததாகவும் அறிவிக்கப்படுகின்றது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top