இலங்கையின் நிர்மாணத்துறை அனுபவங்களை
சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்
– ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன
தற்போதைய நிர்மாணத் தொழிற்துறை அறிவு புதிய தொழில்நுட்பங்களுடன் முழுமையாக வளம்பெற்றுள்ளபோதும், அவ் அறிவை உள்நாட்டு நிர்மாணத்துறையில் நாம் பயன்படுத்தும்போது பண்டையகால அறிவு மற்றும் அனுபவங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
கடந்தகால நிர்மாணத்துறை வரலாற்றில் இலங்கைக்கு ஒரு கௌரவமான இடம் இருந்துவந்துள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, ‘லோவாமகபாய’ போன்ற வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த நிர்மாணப் பணிகள் குறித்து வரலாற்று நூல்களை ஆய்வு செய்கின்றபோது அது நிருபிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இலங்கை நிர்மாணத்துறை சங்கத்தின் 15வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை ஆரம்பமான “நிர்மாணத்துறை 2015” கண்காட்சியினை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆரம்பித்து வைத்தார்.
நிர்மாணத்துறையுடன் தொடர்பான இயந்திரங்கள், கருவிகளைக் காட்சிப்படுத்துவதுடன், நிர்மாணத்துறை தொடர்பான அறிவைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் இலங்கை தேசிய நிர்மாண சங்கம் ஏற்பாடு செய்துள்ள இக் கண்காட்சி இன்று முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறும்.
எமது நாட்டில் இரும்புப் பாவனைக்கு கிறிஸ்த்துக்கு முற்பட்ட காலம் வரை மிக நீண்ட வரலாறு உள்ளமையை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, எமது பண்டைய அரசர்கள் 34,000க்கும் மேற்பட்ட குளங்களை நீர்ப்பாசனத்திற்காக அமைத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment