தனது கட்டுப்பாட்டில் இருந்த 2 தீவுகளை
சவூதியிடம் ஒப்படைக்கிறது எகிப்து

கடந்த 60 ஆண்டுகளாக எகிப்தின் கட்டுப்பாட்டில் இருந்த இரு தீவுகளை, சவூதி அரேபியாவிடம் ஒப்படைக்கவிருப்பதாக அந்த நாடு அறிவித்துள்ளது.
 இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
 செங்கடலில் சவூதி அரேபியாவுக்குச் சொந்தமான டிரான், சனாஃபிர் ஆகிய தீவுகளை இஸ்ரேல் ஆக்கிரமிக்காமல் பாதுகாப்பதற்காக, அந்தத் தீவுகளின் கட்டுப்பாட்டை எகிப்து 1950-ஆம் ஆண்டு கேட்டுப் பெற்றது. எனினும், 1967-ஆம் ஆண்டு மேற்காசியப் போரில் அந்தத் தீவுகளை இஸ்ரேலிடம் எகிப்து இழந்தது.
 எனினும், 1979-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அமைதி ஒப்பந்தத்தின்கீழ் அந்தத் தீவுகளை எகிப்திடம் இஸ்ரேல் திரும்ப ஒப்படைத்தது.
 அதனைத் தொடர்ந்து அந்தத் தீவுகளை எகிப்து தொடர்ந்து தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததால் அந்த நாட்டுக்கும், சவூதி அரேபியாவுக்கும் இடையே இது தொடர்பாக சர்ச்சை நிலவி வந்தது.

 இந்தச் சூழலில் இரு நாட்டு உறவை மேம்படுத்தும் வகையில், சர்ச்சைக்குரிய அந்தத் தீவுகளை மீண்டும் சவூதி அரேபியாவிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக எகிப்து அறிவித்தது. இதற்கு, அந்த நாட்டு மக்களிடையே பலத்த எதிர்ப்பு நிலவுவதாகவும்  கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top