தேசிய விவசாய சபையொன்று அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்

தேசிய விவசாய மாநாட்டில் ஜனாதிபதி உரை

வருடாந்த வரவு செலவுத் திட்டத்தை தயாரிக்கும்போதும் விவசாயத்துறையுடன் தொடர்புடைய தீர்மானங்களை மேற்கொள்கின்றபோதும் விவசாய சமூகத்தின் கருத்துக்கள், முன்மொழிவுகளைப் பெற்று அவர்களின் நேரடிப்பங்களிப்பைப் பெற்றுக்கொள்ளும் வகையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் ஒரு முன்மொழிவுக்கேற்ப புதிய தேசிய விவசாய சபையை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.
எல்லா மாவட்டங்களினதும் விவசாய அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அச்சபையை அமைக்கவுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, திறைசேரி, விவசாய, நீர்ப்பாசன, மகாவெலி அபிவிருத்தி அமைச்சுகளின் அதிகாரிகளினதும் பங்குபற்றுகையுடன் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கூடும் அச்சபையில் நெல் கொள்வனவு, உரமானியம், உபகரணங்கள் கொள்வனவு மற்றும் சந்தைப்படுத்தல் போன்ற எல்லா விடயங்கள் குறித்தும் எடுக்கப்படும் தீர்மானங்களை வேறு எவரும் மாற்ற முடியாது என்பதோடு, அத்தீர்மானங்கள் கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய விடயங்களாக சட்டமாக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
நேற்று 6 ஆம் திகதி முற்பகல் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற தேசிய விவசாய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இந்த மாநாடு நீர்ப்பாசன, நீர் வளங்கல் முகாமைத்துவ அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி, இன்றைய தினம் பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் இந்த விவசாய மாநாட்டுக்கு அரசாங்கம் பெருமளவு செலவு செய்திருப்பவதாக இன்று சில இணையத்தளங்களினூடாக பல செய்திகளை வெளியிட்டு அரசாங்கத்திற்கு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருப்பதாகவும் இங்கு நடைபெறுவது இசைக் கச்சேரியல்ல என்றும் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்துவரும் விவசாய சமூகத்தின் உண்மையான பிரச்சினைகளை கலந்துரையாடி தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளும் விவசாய மாநாடு என்பதை அவர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இதற்கு முன்னர் இதுபோன்ற ஒரு விவசாய மாநாட்டை நடாத்துவதற்கு எந்தவொரு அரசாங்கமும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, செயற்படும் ஒரு அரசாங்கம் என்றவகையில் தமது அரசாங்கம் விமர்சனங்களுக்குப் பயப்படப்போவதில்லை என்றும் விமர்சனங்களை முன்வைப்பவர்கள் செயற்பட முடியாதவர்களே என்றும் குறிப்பிட்டார்.
இவ்வருடம் முதல் ஒவ்வொரு வருடமும் நிலையாக நடைமுறைப்படுத்தப்படும் வகையில் தேசிய விவசாயிகள் தினத்தைப் பிரகடனம் செய்வதாகக் குறிபிட்ட ஜனாதிபதி, விவசாய சமூகத்தின் உரிமைகள், சலுகைகள் மற்றும் அவர்களது வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்தல் என்பவற்றுக்காக பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களுடன் கூடியதாக அத்தினத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும்  குறிப்பிட்டார்.
விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட தேசிய பொருளாதாரத்தையுடைய ஒரு நாடு என்றவகையில் இந்த நாடு இன்றுபோல் நாளையும் நிலைத்திருக்கப்போவது விவசாய பலத்திலாகும் எனத் தெரிவத்த ஜனாதிபதி, பதிய அரசாங்கம் இன்று இந்த நாட்டில் விவசாயத்துறையில் ஒரு புதிய பயணத்திற்கான ஒரு ஆரம்பப் பிரவேசத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அன்று அரசாங்கத்திற்குள் இருந்து விவசாய சமூகத்தின் உரிமைகள், சலுகைகளுக்காகக் குரல் கொடுத்த தாம், தமது உரிமைகள் சலுகைகள் தொடர்பில விவசாய சமூகம் போராடுவதை ஒருபோதும் நிராகரி;க்கப்போவதில்லை எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அவர்களது குரலுக்கு செலவிசாய்ப்பதே யல்லாமல் அதனை நசுக்கிவிடுவதற்கு ஒரு போதும் நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என்றும் குறிப்பிட்டார்.
விவசாய பொருளாதாரத்தைப் பலப்படுத்தி விவசாய சமூகத்தை எழுச்சி பெறச் செய்வதற்காக வரலாற்றில் வேறு எந்த அரசாங்கத்தைப் பார்க்கிலும் அதிக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, விவசாய சமூகத்திற்கு நன்மை பயக்கும்வகையில் அவர்களது உற்பத்தி நடவடிக்கைகளில்  ஈடுபடுவதற்குத் தேவையான தீர்மானங்கள் எடுக்கப்படும் என்றும்  குறிப்பிட்டார்.
சேனைப் பயிர்ச்செய்கை மற்றும் கரும்புப் பயிர்ச்செய்கை தொடர்பான பிரச்சினைகள் அடங்கிய ஒரு அறிக்கையும் ஜனாதிபதியிடம்; இதன்போது கையளிக்கப்பட்டதோடு, மாநாட்டில் கலந்து கொண்ட பிரிதிநிகள் தமது பிரச்சினைகள் தொடர்பாக பல்வேபறு விடயங்களை விரிவாக முன்வைத்தனர்.

நீர்ப்பாசன, நீர்வளங்கள் முகாமைத்துவ அமைச்சர் காமினி விஜித் விஜேமுனிசொய்சா, அமைச்சர்கள் துமிந்த திசாநாக்க, சுசில் பிரேமஜயந்த, ரஞ்சித் மத்தும பண்டார, இராஜாங்க அமைச்சர்களான பாலித ரங்கே பண்டார, வசன்த சேனாநாயக்க, பிரதி அமைச்சர் எரான் விக்கிரமரத்ன, நீர்ப்பாசன, நீர்வளங்கள் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஆர் டபிள்யூ எம் ரத்நாயக்க மற்றும் அமைச்சுகளின் செயலாளர்கள் அரசாங்க அதிகாரிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கெண்டனர்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top