தானும் தனது குடும்பமும் முஸ்லிம் என்ற

ஒரே காரணத்துக்காகவே இந்தப் படுகொலையை

விடுதலைப் புலிகள் செய்தனர்

09 பேரை பலி கொடுத்த ஒரு வயோதிபரின் கருத்து!

கொடிய பயங்கரவாதிகள் எனது குடும்பத்தில் மனைவி, மகள், பேரப்பிள்ளைகள் உட்பட 9 பேரைப் பலியெடுத்து என்னைத் தனிமைப்படுத்தி விட்டனர் என்று ஏறாவூரில் 1990 ஆம் ஆண்டு பயங்கரவாதிகளின் நடுநிசித் தாக்குதலுக்குள்ளான 78 வயது வயோதிபர் தனது துயரத்தை முன்வைத்துள்ளார்.
இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படவுள்ள நல்லிணக்கப் பொறிமுறைக்கு மக்களிடம் கருத்தறியும் அமர்வு இன்று ஏறாவூர் நகர பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதன்போது மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் வசிக்கும் மக்கள் செயலணியின் முன் ஆஜராகி தமது கருத்துக்களை வெளியிட்டனர்.
தொடர்ந்தும், அங்கு தனது துயரங்களையும் இழப்புக்களையும் பற்றி வெளிப்படுத்திய ஏறாவூர் மீராகேணி வாசியான எம். மீராசாஹிபு, தானும் தனது குடும்பமும் முஸ்லிம் என்ற ஒரே காரணத்துக்காகவே இந்தப் படுகொலையை விடுதலைப் புலிகள் செய்தனர்.
இதனைத் தான் இன்றுவரை உணர்ந்திருப்பதாகவும் ஆனாலும், விடுதலைப் புலிகள் முஸ்லிம்களைப் படுகொலை செய்ததற்கான சரியான காரணத்தை இன்னும் தான் அறிந்திருக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
தற்போது தனிமைப்படுத்தப்பட்டு வயோதிபத்தை அடைந்துள்ள தனக்கு உதவிகள் வழங்கப்பட வேண்டும் எனவும் தன் குடும்பத்தினரைப் படுகொலை செய்தவர்களை நீதியின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.


அத்துடன் இது போன்ற கொடுஞ்செயல்கள் இனி இந்த நாட்டில் எவருக்கும் நிகழ்ந்து விடக் கூடாத வண்ணம் மனிதர்கள் என்ற அடிப்படையில் எல்லோரும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் ஆதங்கம் நிறைந்த யோசனைகளை 78 வயது வயோதிபர் முன்வைத்துள்ளார்.








0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top