பம்பலப்பிட்டியில் நேற்று முன் தினம் கடத்தப்பட்ட இளம் வர்த்தகர்
முஹம்மத் சகீப் சுலைமான் தொடர்பில்  இதுவரை தகவல் இல்லை!

கொழும்பு - –பம்பலப்பிட்டி, கொத்தலாவல மாவத்தையில் உள்ள தனது வீட்டின் பிரதான நுழைவாயில் அருகே வைத்து பிரபல கோடீஸ்வர முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்.
வான் ஒன்றில் வந்தஅடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் நேற்று முன் தினம் நள்ளிரவு வேளையில் இக்கடத்தல் இடம்பெற்றுள்ளதாக பிரதேசத்துக்குபொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கடத்தப்பட்ட கோடீஸ்வர வர்த்தகரான முஹம்மத் சகீப் சுலைமான் (வயது 29) என்பவரின் மனைவி பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும், அந்த முறைப்பாடு மீதான் மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் சிறப்பு பொலிஸ் குழு முன்னெடுத்துள்ளதாகவும் விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
நேற்று முன்தினம் நள்ளிரவு வேளையில் பிரபல உணவகம் ஒன்றில் நண்பர்களுடன் சேர்ந்து உணவருந்தி விட்டு முஹம்மத் சகீப் சுலைமான் எனும் வர்த்தகர் பம்பலப்பிட்டி, கொத்தலாவல மாவத்தையில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.
வீட்டின் அருகே சென்றுள்ள அவர் வீட்டின் பிரதான வாயிலை திறக்குமாறு மனைவிக்கு தொலைபேசியில் தனது காருக்குள் இருந்தவாறே அறிவித்துள்ளார்.

இதன்போது வீட்டுக்குள் இருந்து வெளியே வந்துள்ள மனைவி பிரதான வாயிலை திறந்துள்ளார். திறக்கும் போது, காரில் இருந்த தனது கணவரான வர்த்தகரை வானொன்றில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் கடத்திக் கொண்டு செல்வதை தான் கண்டதாக மனைவி நேற்று பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து விசாரணைகள் கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க, மேற்பார்வையில் பம்பலப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கீழான குழுவொன்றினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதனை விட இது குறித்து சிறப்பு விசாரணை செய்யும் பொறுப்பு கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சர் நிஸாந்த டி சொய்ஸாவின் மேற்பார்வையில் உதவி பொலிஸ் அத்தியட்சர் சந்திரதிலக, மற்றும் அதன் பொறுப்பதிகாரி நெவில் டி சில்வா ஆகியோரின் கீழான சிறப்புக் குழுவிடம் கையளிக்கப்ப்ட்டுள்ளது.
நேற்று மாலை வரையிலான விசாரணைகளில் கடத்தலுக்கான காரணமோ, கடத்தல்காரர்கள் யார் என்பதோ தெரியவந்திருக்கவில்லை.
எவ்வாறாயினும் கடத்தல்காரர்களுடன் குறித்த வர்த்தகர் போராடியுள்ளமைக்கான தடயங்களை குற்றத் தடுப்புப் பிரிவினர் கண்டறிந்துள்ளனர்.
அதன்படி வர்த்தகரின் கைக்கடிகாரம் கடத்தல் இடம்பெற்ற இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதுடன் அவ்விடத்தில் போராடும் போது வர்த்தகருக்கு ஏற்பட்ட காயத்திலிருந்து சிந்தியிருக்கலாம் என சந்தேகிக்கத்தக்க இரத்தக் கறைகளையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
குற்றத் தடுப்புப் பிரிவின் மேலதிக விசாரணைகளில், விசாரணைகளுக்கு தேவையான மேலதிக தகவல்கள் சிலவும் கிடைக்கப் பெற்றுள்ளன.

குறித்த வர்த்தகர் வெளிநாட்டிலிருந்து உடைகளை இறக்குமதி செய்யும் பிரதான இறக்குமதியாளர் என கூறும் பொலிஸார் குறித்த வர்த்தகருக்கு பலர் மோசடி செய்துள்ளதாகவும் அது தொடர்பில் அவ்வர்த்தகர் குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் மோசடி தடுப்புப் பிரிவு ஆகியவறில் நான்கு முறைப்பாடுகளை செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top