தமிழ் மொழி பேசும் மக்களுக்கான பிரச்சினைகள் பற்றி
பெரும்பான்மை அரசியல்வாதிகளுக்கு நன்கு புரியும்
அரசியல் செய்வதற்காக காலத்தைக் கடத்துகின்றார்கள்
முன்னாள்
அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் கவலை
எமது ஸ்ரீலங்கா நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் சிறுபான்மை இனத்தவர்களான தமிழ் மொழி பேசும் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் தற்போது இருந்து கொண்டிருக்கும் பிரச்சினைகள் என்ன என்பது குறித்து சகல பெரும்பான்மை அரசியல்வாதிகளுக்கும் நன்கு புரியும்.
ஆனால் இம்மக்களின் பிரச்சினைகளை அறிந்திராதவர்கள் போல் இதுபற்றி மேலும் மேலும் பேசிக்கொண்டும் நாட்களைக் கடத்திக் கொண்டும் எமது பெரும்பான்மை அரசியல்வாதிகள் அரசியல் நடத்திக் கொண்டிருப்பதுதான் வேடிக்கையான விடயமாக இருந்து கொண்டிருக்கிறது என முன்னாள் வர்த்தக, வாணிபத்துறை அமைச்சரும் மூத்த அரசியல்வாதியுமான ஏ.ஆர்.மன்சூர் கவலை வெளியிட்டார்.
தற்போதய அரசியல் நிலை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மூத்த அரசியல்வாதியான முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில்.
தமிழ் மொழி பேசும் இனத்தவர்களான தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சகல விடயங்களிலும் சம அந்தஸ்து வழங்கப்படுவதுடன், அவர்களுக்கான நியாயமான உரிமைகள் எதுவும் மறுக்கப்படாமல் மானிடத்தன்மையுடன் வழங்கப்பட்டாலே நாட்டில் பெரும்பான்மை சிறுபான்மை என்ற உணர்வில்லாமல் பிரச்சினைகள் தானாகவே மறைந்துவிடும்.
ஆனால் பிரச்சினைகளை சரியாகப் புரிந்து கொண்டிருந்தும் அதற்கு சரியான தீர்வுக்கு வராமல் எதை எதையோ பேசிக்கொண்டு பிச்சைக்காரன் புண்ணுக்கு பரிகாரம் தேடாமல் பிச்சை எடுப்பதற்கு புண்ணைப் பயன்படுத்துவது போன்று தமிழ் பேசும் இனத்தவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் அதைப்பற்றி புதிது புதிதாகப் பேசிப் பேசியே காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இன்று தமிழ் மொழி பேசும் இனத்தவர்களான தமிழர்களையும் முஸ்லிம்களையும் பிரச்சினைக்குள் தள்ளிவிடல் வேண்டும் என்ற நோக்கில் ஒரு சிலர் வடக்கும் கிழக்கும் இணைக்கப்படல் வேண்டும் என்றும் இன்னும் ஒரு சிலர் இல்லை இரு மாகாணங்களும் பிரிந்தது பிரிந்ததாகவே இருக்க வேண்டும் என்று வாதம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த வாதங்களை நடத்திக் கொண்டிருக்கும் சகல அரசியல்வாதிகளுக்கும் இதன் சகல நன்மை தீமைகள் பற்றி நன்கு தெரியும். ஆனால், புரியாதவர்கள் போல் பேசிக்கொண்டிருக்கிறார்கள் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment